புலம்பெயர் தமிழர்கள் குருடர்கள் என்கிறார் சிங்கள அமைச்சர்

கொழும்பு: இலங்கையில் எவ்வளவு சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை  ஏற்றுக்கொள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மறுக்கின்றனர்; அவர்கள் உண்மையில் குருடர்கள் என இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இணையத் தளங்களின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொண்டோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. மக்களின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள நேரடியாக பயணம் செய்ய முடியும் என்பதே சர்வதேச சமூகத்திற்கு நாம் வழங்கும் செய்தியாகும் என அவர் கூறினார்.

கடந்த மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தங்களது விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறு சிறு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இலங்கையில் தேர்தல் நடந்ததே கிடையாது. எனினும், அவை தேர்தல் முடிவுகளை பாதித்தனவா என்பதனையே கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பானவர்களே அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். இதனால் பக்கச்சார்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி மக்கள் அதுவும் சொந்த நாட்டு மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்படும்போது அதனை தடுக்காமல் கண் இருந்தும் குருடர்களாக அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளில் இருந்தவர்களில் தானும் ஒருவர் என்பதைனை மறந்துவிட்டு பேசுகிறார் இந்த மஹிந்த சமரசிங்க.

TAGS: