அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்

“எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என நாங்கள் இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்” என இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அதில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இதன்போது உரையாற்றிய சம உரிமைகளுக்கான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளே;

“மக்களை இன, மத, சாதி எனப் பிரித்து ஆட்சி செய்யும் முதலாளித்துவ தேவையை தோற்கடித்து, சம உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள பலர் நாட்டில் பரந்துபட்டு வாழ்கின்றனர். நாம் அவர்கள் மத்தியில் செல்ல வேண்டும். தமிழர்களுக்காகப் போராடும் சிங்களவர்கள், முஸ்லிம்கள்; முஸ்லிம்களுக்காகப் போராடும் தமிழர்கள், சிங்களவர்கள்; சிங்களவர்களுக்காகப் போராடும் தமிழர்கள், முஸ்லிம்கள் இருக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சம உரிமைகளுக்கான அமைப் பின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் உரையாற்றிய, சம உரிமை அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.கிருபாகரன்;

“போர் முடிந்த பின்னர் சிங்களவர்கள் வெற்றி பெற்றனர். தமிழர்கள் தோல்வியடைந்தனர் என அரசாங்கம் கூறியது. அரசாங்கம் எப்படி அவ்வாறு கூற முடியும் அனைவரும் தோற்றுப் போய்விட்டனர் என நாம் எண்ணுகின்றோம். போர் நடைபெற்ற காலத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்தனர். தற்போது போர் முடிந்து விட்டது. ஆனால் போர் நடைபெற்ற காலத்தை விட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.”

“தற்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுகின்றனர். விகாரைகளை அமைக்கின்றனர். வெசாக், பொசான், பெளர்ணமி நாட் களில் தானம் வழங்குகின்றனர். நாம் முன்னர் இருந்த காலத்தில் இருந்த பெயர்கள் அந்தக் கிராமங்களில் இல்லை. சிங்களவர்கள் எவரும் இல்லாத தமிழர்களின் பூர்வீக கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமானால், விகாரைகளை அமைப்பதை ஏற்றுக்கொள்ளுமானால், சிங்களவர்கள் அதிகமாக வாழும் தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் இந்துக் கோவில் இருப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது? அப்படியானால் அதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

“தற்போதுள்ள பிரச்னையை சிங்களவர், தமிழர், முஸ்லிம் எனத் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இணைந்து இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். இப்படிப் பேசுவதால் என்னையும் அச்சுறுத்தக் கூடும். எனினும் நாங்கள் இதனைப் பேச வேண்டும். இன்று நாம் வாய்களை மூடிக் கொண்டிருந்தால் பிரச்னைகளை தீர்க்கமுடியாது; பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாவிடின் இன்னும் 15 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகுவார்கள்” எனவும் கிருபாகரன் கூறியுள்ளார்.

TAGS: