இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியல்ல என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
போர் சூழல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தாய்நாடு திரும்பும் ஒரு சூழலை இலங்கையில் உருவாக்குவதே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அண்மையில் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறிய கருத்து தமக்கு ஏற்புடையது அல்ல என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்பதும்தான் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கை என்று அவர் விளக்கினார்.
இதற்கான சூழ்நிலை இலங்கையில் தற்போது இல்லை என்றும், அரசாங்கம் அச்சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்தால்தான் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக பலமான சக்தியாக குரல் எழுப்ப முடியும் என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளுமான மனோ கணேசன்.