இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க கோரிக்கை

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும் அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை வந்தபோதே இந்த கோரிக்கையை சுவாமி விடுத்தார்.

அலைக்கற்றை உரிமங்கள் தொடர்பாக அனைத்து விவரங்களும் அப்போதைய நிதியமைச்சருக்குத் தெரிந்திருந்ததாகவும் அவர் நினைத்திருந்தால் முறைகேடு நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்றும் தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்திய தலைமையமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை கடந்த வாரம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் சுவாமி. அது தொடர்பாக செவ்வாய் கிழமை விசாரணை நடந்தது.

அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது, ராசாவுக்கு மட்டுமன்றி, ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துள்ளது என்று கூறிய சுப்ரமணியன் சுவாமி, அதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணை அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். தான் தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். எல்லாப் பழியையும் ராசா மீதே போட்டுவிட்டு சிதம்பரம் தப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த விசாரணை மூலம் நீங்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். உரிமக் கட்டணங்களை நிர்ணயித்தது தொடர்பாக ராசாவும் சிதம்பரமும் சேர்ந்து முடிவெடுத்தார்களா என்பதைத்தான், தான் அறிய விரும்புவதாக சுப்ரமணியன் சுவாமி சுட்டிக்காட்டினார்.

மேலும், விசாரணை நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடியதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

TAGS: