மாநிலம் ஒன்றின் பணக்காரத் தலைவர்’ சம்பந்தப்பட்ட ஊழல்கள் எனக் கூறப்படும் விஷயங்கள் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சட்ட விதிகள் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாஸ் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் கூறியிருக்கிறார்.
ஊழல் மீதான நாடாளுமன்றச் சிறப்புக் குழுவுக்கு கடந்த வாரம் விளக்கமளித்த எம்ஏசிசி அதனைத் தெரிவித்தது என குழு உறுப்பினர்களில் ஒருவருமான சலாஹுடின் சொன்னார்.
“பெரும் செல்வத்தைச் சேர்த்து விட்டதாக கூறப்படும் மாநிலத் தலைவர் (ketua negeri) ஒருவர் மீது ஆறு விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மேலோட்டமான சட்டங்கள் காரணமாக அவர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இயலவில்லை.”
“ஆகவே புதிய சட்டச் சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்கு உதவியாக அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லுமாறு எம்ஏசிசி குழுவுக்கு யோசனை கூறியது,” என்றும் சலாஹுடின் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“உறுதிப்படுத்தும் சாட்சியங்களை எம்ஏசிசி பெற முடியவில்லை”
நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் சாட்சியங்களை பெற முடியாமல் இருப்பதால் அந்தச் செல்வந்தர் சம்பந்தப்பட்ட எம்ஏசிசி வழக்கை தொடர முடியவில்லை என மாநிலத் தலைவருடைய பெயரைக் குறிப்பிடாமல் அவர் சொன்னார்.
“லஞ்சம் சாலை ஒரத்தில் நடக்கவில்லை. அவ்வாறு செய்யும் போது மக்கள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் (தனி நபர்களுக்கு இடையில்) அடிப்படையில் அது செய்யப்படுகின்றது,” என்றும் சலாஹுடின் குறிப்பிட்டார்
ஊழல் தொடர்பில் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் உட்பட பல பிரபலமான அரசியல் புள்ளிகளை தான் விசாரித்து வருவதாகவும் எம்ஏசிசி குறிப்பிட்டது.