மலேசியாவில் மகளிர் உரிமை இயக்கங்கள் தேவை இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அவருக்குப் பெண்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி எதுவும் தெரியாது எனத் தோன்றுவதாக பக்காத்தான் ராக்யாட் மகளிர் தலைவிகள் இன்று கூறியுள்ளனர்.
உலக அளவிலான பால் (Gender) இடைவெளி குறியீட்டில் மலேசியாவின் நிலை எந்த அளவுக்கு தாழ்ந்திருக்கிறது என்பதை அவர் அறியவில்லை என்பதைக் காட்டுவதாக பிகேஆர் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதின் கூறினார்.
“வாக்களிப்பதற்கான உரிமைக்கும் தேசியப் பங்கேற்புக்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. மகளிர் வலிமையை உயர்த்தி முக்கிய நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.”
மகளிர் வலிமையை உயர்த்தும் பணிகள் மோசமாக உள்ளன. 2011ம் ஆண்டுக்கான உலக அளவிலான பால் (Gender) இடைவெளி குறியீட்டில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது என பிகேஆர் மகளிர் தலைவியுமான சுராய்டா சொன்னார்.
மொத்தம் 135 நாடுகள் உள்ள அந்தக் குறியீட்டில் மலேசியா 97வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டார நாடுகளுடன் ஒப்பிடுகையில் அது மோசமான நிலையாகும். பிலிப்பீன்ஸ் 8வது இடத்திலும் புருணை 76வது இடத்திலும் தாய்லாந்து 60 வது இடத்திலும் சிங்கப்பூர் 57வது இடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
‘அரசு சாரா அமைப்பு ஒன்றின் தலைவரை மகளிர் அமைச்சராக நியமிக்கவும்’
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான நஜிப்-புக்கு பிஎன் -னில் உள்ள மகளிர் தலைவிகள் ‘தவறான ஆலோசனைகளை’ கொடுத்துள்ளனர். நஜிப் தமது உரையின் மூலம் மலேசிய பெண்களை ‘இழிவுபடுத்தியுள்ளார்’.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சராக நஜிப் நியமிக்கப்பட்டதே தவறாகும். அந்தப் பதவியை ஏற்க பொருத்தமான பிஎன் தலைவர்கள் இல்லை என்றால் டாக்டர் சிசிலியா இங் (Penita Intitiative), ராபியா ஒமார் (முன்னாள் அவாம் தலைமை நிர்வாக அதிகாரி), ஐவி ஜோஷியா ( பெண்கள் உதவி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி) போன்ற அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்களை நியமிக்கலாம் என நாங்கள் யோசனை கூறுகிறோம்,” என்றார் அவர்.