ஐஎஸ்ஏ-க்குப் பதில் மாற்றுச் சட்டங்களை பக்காத்தான் ஏற்காது

அரசு ரத்துச் செய்யப்போவதாக உறுதிகூறியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக மாற்றுச் சட்டம் எதுவும் கொண்டுவந்தால் பக்காத்தான் ரக்யாட் அதனை ஏற்காது.

“எங்கள் நிலைப்பாடு தெளிவானது: ஐஎஸ்ஏ-யை முற்றாக ரத்து செய்யுங்கள்;அதற்குப் பதிலாக வேறு எதுவும் வேண்டாம்”, என்று பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

நேற்றிரவு ஐஎஸ்ஏ-க்குப் பிந்திய நிலவரத்தை ஆராயும் ஒரு கருத்தரங்கில் பேசிய கோம்பாக் எம்பியுமான அஸ்மின், ஐஎஸ்ஏ-க்குப் பிந்திய சட்டக் கட்டமைப்பை வரைவதில் பக்காத்தான் அரசுக்கு உதவத் தயார் என்றும் கூறினார்.

“புதிய சட்டக் கட்டமைப்புக்கு உதவ நாங்கள் தயார்.அது, தனிப்பட்டவர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாகவும் இப்போதைய ஐஎஸ்ஏ போலவும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்”, என்றாரவர். 

கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஒத்துழைப்புடன்  யாயாசான் சிலாங்கூர் ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் சுபாங் எம்பி ஆர்.சிவராசா, சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரி, அரசியல் ஆய்வாளர் வொங் சின் ஹுவாட் அகியோரும் கலந்துகொண்டனர்.

தேவை வலுவான, நம்பகமான போலீஸ் படை

புதிய சட்டக் கட்டமைப்பு பற்றி வினவியதற்கு மாற்றரசுக் கூட்டணி போலீசைச் சீரமைக்க பரிந்துரைக்கும் என்று அஸ்மின் கூறினார்.

“போலீசின் அதிகாரங்களைக் கூட்ட வேண்டும் என்று பரிந்துரைப்போம்.போலீஸ் அதிகாரிகள் தொழிலை முறையாக செய்பவர்களாக இருத்தல் வேண்டும். போலீஸ் படை வலுவானதாகவும் நம்பிக்கைக் கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்…..ஐஎஸ்ஏக்குப் பதிலியாக இருத்தல்கூடாது”, என்றாரவர்.

நம்பகமான போலீஸ் படை, விசாரணையின்றிக் காவலில் வைக்கும் நடைமுறையை நாடாமலேயே தேசியப்பாதுகாப்புக்கு ஏற்படும் மருட்டல்களைச் சமாளிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்றவர் குறிப்பிட்டார்.

இதே கருத்தை எதிரொலித்த சுபாங் எம்பி சிவராசா, பக்காத்தான் சுயேச்சை போலீஸ் புகார் ஆணையம் அமைக்கும் அலோசனைக்கு மீண்டும் உயிர்கொடுப்பதுடன் போலீஸ் தொழில்முறையுடன் தனித்து இயங்க போதுமான நிதிவசதிகளையும் செய்துகொடுக்கும் என்றார்.

“போலீசார் துப்பறிவாளர்கள்போல் செயல்பட்டு குற்றசெயல்புரியும் கும்பல்களுக்குள் ஊடுருவ வேண்டும்(தடுக்கும் நோக்கத்தோடு).ஆனால், அவர்களோ மாற்றரசு அரசியல்வாதிகளைக் கண்காணிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். அரசியல்வாதிகளைப் பின்தொடர்வதையே வேலையாகக் கொண்டுள்ள போலீஸ் சிறப்புப் பிரிவு நமக்குத் தேவையில்லை.”

குற்றவியல் சட்டங்களின்கீழ் போலீசுக்குப் போதுமான அதிகாரங்கள் உண்டு. அதை வைத்தே பயங்கரவாதிகளையும் பயங்கரவாதச் செயல்களையும் ஒடுக்க முடியும்  என்று சிவராசா கூறினார்.

விசாரணியின்றித் தடுத்துவைக்கும் சட்டங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீரமைப்புக்குள் வராத 1985ஆம் ஆண்டு அபாயமிக்க போதைமருந்து(சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகள்)சட்டம் உள்பட விசாரணையின்றிக் காவலில் வைக்க வகை செய்யும் எல்லாச் சட்டங்களையுமே பக்காத்தான் அகற்றும்.

“அந்த(தடுப்புக்காவல்)ச் சட்டங்களை அகற்றி வழக்கத்தில் உள்ள சட்டங்களையே பயன்படுத்துவோம்”, என்றாரவர்.

விசாரணையின்றிக் குற்றவாளிகள் தடுத்துவைக்கப்படும்போது உண்மை நீதிமன்றத்தில் வெளிவருவதில்லை. உண்மையான குற்றவாளிகள் மேலிடத்தில் உள்ளவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என்று சிவராசா கூறினார்.

“சாபாவின் பிரொஜெக்ட் ஐசி (Project) திட்டத்தை எடுத்துக்கொள்வோம்….அதை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றால், யார் அதற்குத் திட்டமிட்டது, யாரிடமிருந்து உத்தரவு வந்தது என்பதெல்லாம் வாக்குமூலமாகக் கிடைத்துவிடும்.”

1990-களில் அரசு அதிகாரிகள் பலர், வெளிநாட்டவருக்கு மலேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள் என்று ஐஎஸ்ஏ-இன்கீழ் கைது செய்யப்பட்டனர்.அந்த அடையாள அட்டைகள்தாம் பின்னாளில் அவர்களை வாக்காளர்கள் ஆக்கியது.

அச்சக, பதிப்பகச் சட்டம், போலீஸ் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்தல் அவசரகாலச் சட்டம், ஐஎஸ்ஏ ஆகியவற்றை ரத்துச் செய்தல் ஆகியவை உள்ளிட்ட சீரமைப்புகள எப்போது மேற்கொள்வது என்று இன்றைய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்யும் என நஜிப் நேற்று அறிவித்தார்.