உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் குற்றங்களைக் குறைப்பதற்கு எதுவும் செய்யாமல், குற்றங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கொண்டிருக்கும் அகப் பார்வையைத் திருத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்க்கிறார் என டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியுள்ளார்.
“குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் குற்றம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் எண்ணமும் இயல்பாகவே மாறும் என்பதை எப்படி அமைச்சருக்கு உணர்த்துவது என்பதுதான் எனக்குப் புரியவில்லை”.
குற்றச் செயல்களைக் கண்டதினாலும் குற்றங்களுக்கு இலக்கானதினாலும்தான் குற்றங்கள் பெருகி வருகின்றன என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது என புவா நேற்று ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
முதலில் குற்றச்செயல்களைக் குறைக்க வேண்டும் அதை விடுத்து, நிபுணர்களின் துணைகொண்டு என்னதான் மூளைச் சலவை முயற்சிகளை மேற்கொண்டாலும் மக்களின் மனத்தில் பதிந்துவிட்ட ஐயுறவுக் கோட்பாட்டை மாற்ற இயலாது என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா கூறினார்.
“ஹிஷாமுடின் ‘அரசாங்கம் என்கேஆர்ஏ திட்டத்தில் அடுத்த கட்டமாக மக்களின் எண்ணத்தை மாற்றுவதில் கவனம் செலுத்தும்’ என்று கூறியதாக வந்த செய்திகளைப் படித்தபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
“தொலைக்காட்சி செய்தியில் அவரே சொன்னதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்”.
ஹிசாமுடின், பட்டியலிடப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் அதனால் குற்றங்கள் பெரிய விவகாரம் இல்லை என்றும் இப்போது மக்களின் எண்ணத்தைத் திருத்த வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போலீசாரின் புள்ளி விவரங்களின்படி பட்டியலிடப்பட்ட குற்றங்கள் 2007-க்கும் 2011-க்குமிடையில் 24.7விழுக்காடு குறைந்துள்ளது என்று கூறிய புவா, அதே காலகட்டத்தில் பட்டியலிடப்படாத குற்றங்கள் 68.7 விழுக்காடு உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“எனவே உள்துறை அமைச்சர் ‘பட்டியலிடப்பட்ட குற்றங்கள்’ பிரச்னையே அல்ல என்று கூறுவதில் தப்பில்லைதான். அதில் தில்லுமுல்லு செய்யப்பட்டு பாதுகாப்பு நிலை மேம்பட்டிருப்பதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது.
“பிரச்னைக்குரியவை ‘பட்டியலிடப்படாட’ குற்றங்களே. அவற்றின் உண்மை நிலவரம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது”, என்று புவா குறிப்பிட்டார்.