நஜிப், ஊழல் விசயத்தில் சொல்வதுபோல் செய்வாரா?-லிம் குவான் எங்

எம்பி பேசுகிறார்:  ஊழல் எதிர்ப்புப் பற்றிப் பேசும் பிஎன் தலைவர்கள், தங்கள் சொத்துகள் பற்றிப் பொதுவில் அறிவித்தும் போட்டிக்கு இடமளிக்கும் திறந்தமுறை டெண்டர்களைச் செயல்படுத்தியும் அரசுத் திட்டங்களில் தங்கள் குடும்பத்தார் பங்கேற்பதற்குத் தடை விதித்தும் டாம்பீகமாக வாழ்க்கை நடத்தும் பிஎன் தலைவர்களை ஒதுக்கிவைத்தும் தாங்கள் சொல்வதுபோல் செய்பவர்கள்தான் என்பதைக் காட்டுவார்களா?

அனைத்துலக ஊழல்தடுப்பு அதிகாரிகள் சங்கத்தின் மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள தலைவர்கள் சரியான விழுமங்களையும் நன்னடத்தையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நஜிப்பிடம் பேச்சுத்தான் பெரிதாக இருக்கிறது.  ஊழல்களுக்கு எதிரான செயல்களில் வேகத்தைக் காண முடியவில்லை.

ட்ரேன்ஸ்பேரன்சி இண்ட்ரநேசனல்(டிஐ)-இன் ஊழல் கணிப்புப் பட்டியலில் (சிபிஐ) 2003-இல் 37-வது இடத்தில் இருந்த மலேசியா, 2012-இல் 60-வது இடத்துக்கு இறக்கம் கண்டது பிஎன்,  ஊழலை ஒழித்துக்கட்டுவதில் தோல்வியுற்றது என்பதைத்தான் காண்பிக்கிறது.

அரசாங்கத்திலேயே ஊழலுக்கு இடமளிக்கும் விவகாரங்கள் மலிந்து கிடப்பதால் ஊழல் பட்டியலில் மலேசியாவின் நிலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளதென டிஐ மலேசியாவின் துணைத் தலைவர் முகம்மட் அலி கூறியிருக்கிறார். வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹுவாங், ஊழலின் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவுக்கு  ரிம26 பில்லியன் இழப்பு ஏற்பட்டு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நஜிப், சொல்வதுபோல் செய்வதில்லை என்பதைத்தான் நிரூபித்துள்ளார். இல்லையென்றால்  மலாக்கா முதலமைச்சர் தம் மகனின் திருமணத்துக்கு 130,000 விருந்தினர்கள் வந்தார்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாரா. அதற்கு எவ்வளவு செலவானது என்பது வேறு விசயம்.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட் குடும்பத்துக்கு பல பில்லியன் பெறுமதியுள்ள சொத்துகள் இருப்பதாக சொல்கிறார்கள். எப்படி சேர்ந்தது இச்சொத்து. இக்கேள்விக்கு இன்னும் பதில் பதில் இல்லை.

தயிப் குடும்பத்துக்கு அளவற்ற சொத்து இருப்பதை அவரது மகன் அபு பெகிர் தயிப்பின் மணவிலக்கு வழக்கில் அவரின் முன்னாள் மனைவி அளித்த வாக்குமூலமும் உறுதிப்படுத்துகிறது. 

நஜிப் ஊழலை எதிர்ப்பது உண்மைத்தான் என்று மலேசியர்கள் நம்ப வேண்டுமானால் சொத்துகளைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பினாங்கில் இது செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்கள் சொத்துவளம் பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அது சரிதான் என்று பன்னாட்டு கணக்காய்வு நிறுவனம் ஒன்றும் சான்று பகர்ந்துள்ளது. பினாங்கில் இதைச் செய்ய முடிகிறது என்றால் பிரதமராலும் அமைச்சரவையாலும் செய்ய முடியாதா?

ஆடம்பரமான மாளிகைகளில் டாம்பீகமாக வாழ்க்கை நடத்தும் பிஎன் தலைவர்களை ஒதுக்க வேண்டும். இன்னொரு ரிம 250 மில்லியன் தேசிய ஃபீட்லோட் ஊழல் நிகழாதிருக்க குடும்பத்தார் அரசாங்கத் திட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரான போரில் இன்னொரு அம்சமாக திறந்தமுறை டெண்டர்களை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். திறந்தமுறை டெண்டர்கள் அல்லாமல் பொதுத் திட்டங்களை நேரடி பேச்சுவழி தங்கள் அல்லக்கைகளுக்கு கொடுப்பதால்- சுங்கை பீசி அரச ஆகாயப் படைத்தளம் மலிவான விலைக்கு விற்கப்பட்டதுபோல்- அரசாங்கத்துக்கு வர வேண்டிய வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

சாபா, சரவாக்கில் 57 கேஆர்1எம் கடைகளுக்காக ரிம386 மில்லியன், அதாவது ஒரு கடைக்கு ரிம6.7 மில்லியன்,  ஒதுக்கப்பட்டிருப்பது நியாயம்தானா? ஒவ்வொன்றும் ரிம6.7 மில்லியனில் கட்டப்பட விருக்கும் இந்தக் கடைகள் உப்பு, சீனி, அரிசி போன்ற அடிப்படைப் பொருள்களை விற்கப் போகின்றனவா, அல்லது நகைகளையும் ஆடம்பரப் பொருள்களையும் விற்கப் போகின்றனவா? 

பினாங்கில், 2008-இல் அரசாங்கம் மாறியதிலிருந்து திறந்தமுறை டெண்டர்கள் அமலில் உள்ளன. அதன் பயனாக ஒவ்வோராண்டும் மிகை பட்ஜெட்தான். பட்ஜெட்டில் மிச்சமாகும் பணம் ‘ஊழல்தடுப்பு ஈவு’ என்று மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பினாங்கில் பக்காத்தான் தலைவர்கள் தங்கள் சொத்துவளத்தைப் பொதுவில் அறிவித்தும், திறந்தமுறை டெண்டர்களை அமல்படுத்தியும், அரசாங்கத் திட்டங்களில் குடும்பத்தார் பங்கேற்பதைத் தடுத்தும் ஆடம்பர வாழ்க்கை வாழும் தலைவர்களை ஒதுக்கிவைத்தும் தாங்கள் ஊழலுக்குத் துணை போகாதவர்கள் என்பதைக் காண்பித்திருக்கிறார்கள்.

இதையே நஜிப்பும் செய்ய முடியாதா?

======================================================================================

LIM GUAN ENG பாகான் எம்பி, பினாங்கு முதலமைச்சர் 

 

TAGS: