சிலாங்கூர் செமினியில் உள்ள தொடக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் விளக்கக் கூட்டம், பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஆகிய ‘தீய சக்திகள்’ பற்றிய பாடமாக மாறியது. அந்தத் தகவலை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வெளியிட்டார்.
லாடாங் செமினி தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் உள்ளூர் இந்து சங்கக் கிளையும் ஏற்பாடு செய்த அந்த நிகழ்வில் ஏறத்தாழ 70 பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளும் (பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்) கலந்து கொண்டதாக நேற்று அந்த நிகழ்வு குறித்து போலீசில் புகார் செய்த அருட்செல்வன் கூறினார்.
“அந்த நிகழ்வில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் படங்களைக் காட்டி விளக்கம் அளித்தனர் என்று அதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் எங்களிடம் கூறினர். அந்த விளக்கத்தில் ஒரு பகுதி குற்றச் செயல்கள் பற்றியதாகும்- ஆனால் சுவாராம், பெர்சே, பிஎஸ்எம் பற்றிய தகவல்களும் அங்கு தெரிவிக்கப்பட்டது,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.
பிஎஸ்எம் தடை செய்யப்பட்டுள்ள மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையது என்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு புத்துயிரூட்டுவது அதன் எண்ணம் என்றும் அந்தக் கட்சியை போலீஸ் கண்காணித்து வருகிறது என்றும் போலீஸ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் சொன்னதாக அருட்செல்வன் கூறிக் கொண்டார்.
தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 கூட்டணி “மக்களிடையே பெரிய பிளவை ஏற்படுத்தி விட்ட பயனில்லாத அமைப்பு,” என்றும் போலீஸ் தெரிவித்தது.
அத்தகைய நடவடிக்கைகளைப் போலீசார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தாம் புகார் செய்ததாக அருட்செல்வன் கூறினார்.
“போலீஸ் தன்னையே விசாரித்துக் கொள்ளும் என நான் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் தான் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அதனைக் கேட்டுக் கொள்வதே போலீஸ் புகாரின் நோக்கம்,” என்றார் அவர்.
“போதைப் பழக்கம், குற்றச் செயல்கள், குண்டர்தனம் ஆகியவற்றின் அபாயங்கள் பற்றி போலீஸ் பேச விரும்பினால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் உண்மைகளை திரித்து அவதூறு கூறி பிஎன் பிரச்சாரக் கருவியாக தன்னை மாற்றிக் கொள்ள அனுமதித்தன் மூலம் போலீஸ் எல்லையைத் தாண்டி விட்டது.”
காஜாங் போலீஸ் நிலையத்தில் தாம் இன்று வாக்குமூலம் கொடுக்கப் போவதாகவும் அருட்செல்வன் தெரிவித்தார்.
‘மே 13க்கு டிஏபி காரணம்’
பெர்சே ‘நாட்டில் கலவரத்தை’ ஏற்படுத்தியது என்பதையும் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் ‘உள் நாட்டில் குழப்பத்தை உருவாக்க நாட்டுக்கு வெளியிலிருந்து நிதிகளை பெற்றது என்பதையும் சித்தரிக்கும் வகையில் போலீஸ் விளக்கக் கூட்டத்தில் படங்கள் காட்டப்பட்டதாக செமினி பிஎஸ்எம் செயலாளர் பி பாப் சுந்தரராஜன் தெரிவித்தார்.
“அந்த போலீஸ் அதிகாரிகள் தமிழ் புலிகள் பற்றிப் பேசினார்கள். தமிழ் புலிகள் பயங்கரவாதிகள் என அவர்கள் குறிப்பிட்டனர். கடந்த ஆண்டு பெர்சே 2.0க்கு முன்னதாக அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட ஒர் எம்பி உட்பட ஆறு பிஎஸ்எம் தலைவர்கள் பற்றியும் போலீஸ் அதிகாரிகள் கவனம் செலுத்தினார்கள்.”
“1950ம் ஆண்டுகளில் நிகழ்ந்த புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை பிஎஸ்எம்-உடன் இணைத்துப் பேசிய அவர்கள் மலேசியாவுக்கு மீண்டும் கம்யூனிசத்தைக் கொண்டு வருவதே பிஎஸ்எம்-மின் நோக்கம் எனத் தெரிவித்தனர்,” என்றார் அவர்.
அந்த விளக்கக் கூட்டம் பற்றி பிஎஸ்எம்-மிடம் விவரித்த பல பெற்றோர்கள், மே 13 இனக் கலவரம் பற்றிய படங்களும் காட்டப்பட்டதாகவும் அந்தக் கலவரத்திற்கு டிஏபி மீது போலீஸ் அதிகாரிகள் பழி போட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
“மே 13 என்பது டிஏபி-க்கும் அம்னோவுக்கும் இடையிலானதாகும் எனக் கூறிய அவர்கள், மலாய்க்காரர்களுக்கு எதிராக சீனர்கள் செயல்படும் பொருட்டு டிஏபி -யே அதற்கு ஏற்பாடு செய்தது என்றும் கூறினர்,” என அவர் சொன்னார்.