டாக்டர் மகாதீர் முகமட் நேற்றும் இன்றும் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை கைவிடுவது பற்றிப் பரிசீலிக்குமாறு டாக்டர் லிங் லியாங் சி-கின் பிரதிவாதித் தரப்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை அனுப்புவதற்கு லிங் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டுள்ளது.
அந்த விவரத்தை லிங்-கின் வழக்குரைஞர் வோங் கியான் கியோங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவியிடம் தெரிவித்தார். இந்த வாரத்தில் விசாரணைக்குக் குறிக்கப்பட்ட தேதிகளை காலி செய்யுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
“டாக்டர் மகாதீர் (டி4) அளித்த சாட்சியம் காரணமாக நாங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை அனுப்புவோம். அதன் முடிவுகளுக்காக காத்திருப்போம்.”
“இதனிடையே அந்தப் பிரதிநித்துவத்தின் முடிவுகள் தெரியும் வரை டிசம்பர் மாதம் வரையில் தேதிகளை காலி செய்யுமாறும் நாங்கள் விண்ணப்பித்துக் கொள்வோம்,” என்றார் அவர்.
அரசு தரப்பு நோக்கத்திற்காக வழக்கமாக குற்றச்சாட்டுக்களைக் குறைக்குமாறு அல்லது கைவிடுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பிரதிநிதித்துவம் அனுப்பப்படும்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கு நீதிபதி அகமாடி டிசம்பர் 4ம் தேதியை நிர்ணயித்தார்.
நாளை அரசு தரப்பு மகாதீரை குறுக்கு விசாரணை செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.