2013 ஜுன் வரை மின் கட்டணம் மாறாது

அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்பம், நீர்வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய் கூறுகிறார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இறுதி முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சரவையிடம் இருப்பதால் அந்த யோசனையை அது நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

மின் கட்டணம் தொடர்பில் தேசியப் பொருளாதார மன்றத்துக்கு அண்மையில் தமது அமைச்சு ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்பித்ததாகவும் சின் தகவல் வெளியிட்டார்.

“அமைச்சரவை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே மறு ஆய்வு ஏதும் இருக்காது என நான் நம்புகிறேன். மின் கட்டணம் மாறாது,” என கோலாலம்பூரில் அனைத்துலக சிறந்த நடைமுறைகள் மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் நிருபர்களைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் அரசாங்கம் கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியது. மின் உற்பத்திக்குத் தேவையான இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்தது அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

-பெர்னாமா