மாட் சாபு கெடாவில் போட்டியிடுவதையே விரும்புகிறார்

 பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் களம் இறக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் கெடாவில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதையே விரும்புகிறார்.

ஆனாலும், எங்கு போட்டியிடுவது என்ற முடிவைக் கட்சி செயலவையிடமே விட்டுவிட மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் தீர்மானித்திருக்கிறார். 

பல தொகுதிகள், பெண்டாங் (கெடா), தாசெக் குளுகோர் (பினாங்கு), தித்திவங்சா (கோலாலும்பூர்) ஆகிய இடங்களுக்குத் தம் பெயரை முன்மொழிந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“ஆனாலும், கெடாவைத்தான் நான் விரும்புகிறேன். அங்கு ஏற்கனவே போட்டியிட்டு வென்றிருக்கிறேன்”, என்று கூறிய அவர், “கட்சித் தலைமைத்துவம்தான் அதை முடிவு செய்ய வேண்டும். எங்கு அனுப்புகிறார்களோ அங்கு செல்வேன்”, என்றார்.

பினாங்கில் பிறந்தவரான மாட் சாபு, 1999-இலிருந்து 2004-வரை கோலா கெடா எம்பி-ஆக இருந்துள்ளார்.