நிக் அசீஸ்: டிஏபி பாஸூக்கு தொந்திரவு கொடுத்ததில்லை

டிஏபி என்றும் பாஸுக்கு தொந்திரவு கொடுத்ததில்லை என்கிறபோது பாஸ் டிஏபியுடன் ஒத்துழைப்பதை எதற்காகக் கண்டனம் செய்கிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட்.

நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், சினார் ஹராபான் உள்பட பல நாளேடுகள் 13வது பொதுத் தேர்தலில் பாஸுக்கு டிஏபி தேவை என்று பாஸின் ஆன்மிகத் தலைவர் கூறினார் என்ற செய்தியை வெளியிட்டிருந்தன.

எதற்காக சிலர், டிஏபி-இன் அரசியல் கோரிக்கைகளுக்கு பாஸ் விட்டுக்கொடுத்து விட்டதாகவும் அதன் போராட்டத்திலிருந்து திசைமாறிவிட்டதாகவும் குறைகூறுவது ஏன் என்பதும் புரியவில்லை என்றவர் சொன்னார்.

இப்படிப்பட்ட செய்திகள் பாஸ் உறுப்பினர்கள் சிலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறிய ஆன்மிகத் தலைவர் பாஸிடம் செய்தித்தாள்களோ, வானொலி தொலைக்காட்சி நிலையங்களோ கிடையாது என்றார்.

“எப்போது வானொலி, தொலைக்காட்சியை முடுக்கி விட்டாலும் அம்னோ பற்றிய செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் அப்படித்தான்”.

பாஸின் ஆயுள் உறுப்பினரும் தேசிய இலக்கியவாதியுமான ஷானோன் அஹ்மட் பாஸ் அதன் தொடக்கக்காலப் போராட்டத்தைத் தொடரவில்லை என்று கூறியிருப்பது குறித்து  கருத்துரைத்தபோது நிக் அசீஸ் இவ்வாறு கூறினார்.

இதனிடையே இன்று பெரித்தா ஹரியானின் முதல் பக்கத்தில்  பாஸின்மீது ஷானோனின் தாக்குதல் தொடர்ந்தது. பாஸில் உள்ள் அன்வார் ஆதரவாளர்களின் காரணமாக அந்த இஸ்மாமியக் கட்சி டிஏபி-யையும் பிகேஆரையும் பின்பற்றத் தொடங்கியிருப்பதாக அவர் சாடியிருந்தார்.

அதன் விளைவாகக் கட்சியில் சமய அறிஞர்கள் ஒதுக்கப்படுவதுபோல் தோன்றுவதால் இஸ்லாத்தின் புனிதத்தைக் காக்கும் கட்சி என்ற நம்பிக்கையை அது இழந்து வருகிறது என்றாரவர்.

“அதன் விளைவாக பாஸ் உறுப்பினர்கள் உள்பட, மலாய்க்காரர்கள் கட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்”, என்றவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: