பெர்சே தலைவர்களுக்குத் தொந்திரவா? குடிநுழைவுத்துறையைக் கேளுங்கள் : ஐஜிபி

கடந்த ஒரு மாதமாக பெர்சே தலைவர்கள் வெளிநாடு செல்ல முற்படும் வேளையில் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவது பற்றி வினவியதற்குக் குடிநுழைவுத் துறையிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று போலீஸ் கூறியது.

இன்று காலை புக்கிட் அமானில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் அவ்வாறு கூறினார்.

“அவர்கள் காரணத்தைக் குடிநுழைவுத் துறையிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்டார்களா என்பதை உறுதி செய்துகொண்டீர்களா?

“(ஊடகச் செய்திகள்) சரியானவைதாமே, வதந்தி இல்லையே?”, என்றவர் திருப்பிக் கேட்டார்.

பெர்சே, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உள்பட இதுவரை   ஐந்து செயற்குழு உறுப்பினர்கள் விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஏன் என்று வினவியதற்குப்  போலீஸ் ஆவணங்களை அவர்கள் காரணம் காட்டினார்கள் என்றும் கூறியது.

அதைத் தன் உறுப்பினர்களுக்குத் “தொல்லைகொடுக்கும், அச்சுறுத்தும்” முயற்சி என்று அது வருணித்தது.

இன்று சுவாராம் தலைவர் தடுக்கப்பட்டார்

இதனிடையே, ஆகக் கடைசியாக சுவாராம் தலைவர் கே. ஆறுமுகம் வெளிநாடு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இன்று காலை மணி 5.15க்கு குறைந்த-கட்டண விமான முனையத்தில் (எல்சிசிடி) குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தாம் பத்து நிமிடங்களுக்குத் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

சென்னை செல்வதற்காக ஆட்டோ கேட்டுக்குச் சென்றபோது அது திறக்கவில்லை என்று ஆறுமுகம்(இடம்) கூறினார்.

“ஒரு அதிகாரி வந்து என் கடப்பிதழைச் சரிபார்ப்பதற்காக எடுத்துச் சென்றார்.பின்னர் உயர் அதிகாரியிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருப்பதாக சொல்லி விட்டுச் சென்றார். 10நிமிடம் கழித்து திரும்பி வந்த அவர் போகலாம் என்றார். நான் ஆட்டோ கேட் வழியாக போக முடியாது என்று சொன்னாரே தவிர அதற்குக் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை”, என்று பெர்சே செயலகத்துக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் ஆறுமுகம் கூறினார். அச்செய்தி அங்கிருந்து, மலேசியாகினிக்கு வந்து கிடைத்தது.

இந்தத் “தொல்லை”சுவாராம் விசாரணையுடன் சம்பந்தப்பட்டதா அல்லது பெர்சே 2.0 சம்பந்தப்பட்டதா என்று தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்..

 

TAGS: