ஸ்டாக்ஹோம் : சீன எழுத்தாளர் மோ யானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சியில் சாதனை படைத்த, ஜப்பானின் யமனாகாவுக்கும், பிரிட்டனின் ஜான் குர்டானுக்கும் அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான விருது, ஒளித் துகள் மற்றும் அயனிகள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உடல் செல்களில் ஊடுருவும் புரதம், வெளிப்புற சமிக்கைகளைப் பெறுவது தொடர்பான, ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட் லெப்கோவிட்ஸ், பிரைன் கோபில்காவுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன எழுத்தாளர், மோ யானுக்கு, இலக்கியத்துக்கான விருது நேற்று அறிவிக்கப்பட்டது. கிராமிய கதைகள், நடப்பு விஷயங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் அதீத கற்பனை விஷயங்களை இணைந்து எழுதும் இவருடைய படைப்புகளைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப் பட்டுள்ளது.