2 வயது மகளை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 ஆண்டு சிறை

டல்லாஸ்: இரண்டு வயது மகளின் கையை பசை போட்டு சுவற்றில் ஒட்ட வைத்து, கடுமையாகத் தாக்கிய தாய்க்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை அமெரிக்காவில் வழங்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது மகள், குறும்பு செய்த காரணத்தால் குழந்தையின் கையில் பசையைத் தேய்த்து, சுவற்றில் ஒட்ட வைத்து விட்டார். அது மட்டுமல்லாது, கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு குழந்தையை அடித்திருக்கிறார்; வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் குழந்தையின் விலா எலும்பு முறிந்தது. கையில் பசை போட்டு சுவற்றில் ஒட்டியதால், குழந்தையின் உள்ளங்கையில் தோல் பீய்ந்துள்ளது.

கடுமையான தாக்குதலில் குழந்தை, இரண்டு நாட்கள் கோமா நிலைக்கு சென்று விட்டது. நினைவு திரும்பிய பின், தன் தாய் தாக்கிய விதத்தை, உறவினர்களிடம் கூறியது.

கடந்த ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தாய் எலிசபெத்துக்கு, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சித்ரவதை செய்ததாக கூறி அமெரிக்க நீதிமன்றம் 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்புக் கூறியுள்ளது.