ஹாம்ஸ்டெட் : இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா.
அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும் ராமனி மீது, புள்ளி விவரங்களுடன் கடுமையாக அதிரடி தாக்குதல் நடத்தினார். மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை வாக்காளர்களுக்கு மத்தியில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்த இந்த விவாதத்தில் ஒபாமா அதிரடியாய் வென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘முதல் விவாதத்தின்போது கொஞ்சம் பெருந்தன்மையா இருந்துட்டேன். அதுக்காக எப்போவும் அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க” – என்று மறைமுகமாக ராம்னிக்கு சொல்லும் வகையில்தான் இன்றைய ஒபாமாவின விவாதம் இருந்தது.
சில நேரங்களில் “நீங்கள் சொல்வது தவறு” என்று முகத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய போது, பதில் சொல்லத் தெரியாமல் திணறி விட்டார் ராம்னி.
பார்வையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் அதை சொல்ல முடியாமல், ஒபாமாவை நோக்கி கேள்வி கேட்ட ராம்னியை பார்க்கும் போது பரிதாமாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.