தங்கம் விற்பனை செய்யும் ஜென்னிவா நிறுவனத்தின்மீது பேங்க் நெகாரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவனத்தின் தங்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டுக் கலங்கி நிற்கும் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 60,000 பேருக்கு நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நடைபெற்ற ஒரு சந்திப்பு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது.
ஜென்னிவா ஆதரவாளர் குழுவின் பேச்சாளர் எம்.சாந்தி, புத்ரா உலக வாணிக மையத்தில் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த நஜிப்பைச் சந்தித்தார்.
“எங்களைக் கவலைப்படாதீர்கள் என்றார். பிரதமரின் ஆறுதல் மொழி கேட்டு மகிழ்ந்து போனோம்”, என்று சாந்தி கூறினார்.
“உங்களைப் பற்றியும் உங்கள் பிரச்னை பற்றியும் அறிவேன். கவலை வேண்டாம். அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்”, என்று பிரதமர் கூறியதாக அவர் சொன்னார்.
சாந்தி பிரதமரிடம் முறையீட்டுக் கடிதம் ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்தார். அதில், ஜென்னிவா நிறுவனம் வழங்கும் ஹிபாவையும் கமிஷனையும் நம்பி 240,000-க்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பணி ஓய்வு பெற்ற பலர் 60-திலிருந்து 80வயதுடையவர்கள் அவர்கள் வாழ்நாள் சேமிப்பை அதில் முதலீடு செய்து அதிலிருந்து ஷியாரியா அடிப்படையில் வழங்கப்படும் ஹிபாவை (அன்பளிப்பை)ப் பெற்று வருகிறார்கள். எங்களில் பலர் ஹிபாவையும் கமிஷனையும் நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”.
முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஜென்னிவா நிறுவனத்தின் சொத்துக்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என சாந்தி விரும்புகிறார். அப்போதுதான் அந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கான அதன் கடப்பாட்டை நிறைவேற்ற முடியும்.
அதே வேளையில் நாட்டில் தங்கப் பரிவர்த்தனைத் தொழிலை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜென்னிவா நிறுவனம் இதுவரை அதன் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதில்லை. சொன்னபடி நடந்து கொண்டிருக்கிறது என்றும் சாந்தி கூறினார்.