பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடம் விசாரணை

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்கள் நேற்று காலை பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் நேற்று காலையில் இலங்கை கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர்.

மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் பிரித்தானிய நீதிமன்ற உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 50 இலங்கையர்களும் நேற்று முற்பகல் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு அழைத்து வரப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இவர்களுக்கு பாதுகாப்புக்காக 100 பிரித்தானிய அதிகாரிகள் வந்திருந்தனர்.

அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்ட இவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களில் 27 தமிழர்களும் 11 சிங்களவர்களும் 12 முஸ்லி;ம்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 17 -ம் திகதியும் பிரித்தானியாவில் இருந்து 44 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தநிலையில் நேற்று வந்தவர்களிடம் இலங்கையின் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.