ஈரான் மீதான தண்டனைத் தடைகளால் சிலோன் டீ ஏற்றுமதியில் பாதிப்பு

ஈரான் மீது விதிக்கபட்டுள்ள சர்வதேச தண்டனைத் தடைகள் இலங்கை தேயிலையின் ஏற்றுமதி விலையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் தேயிலை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இலங்கையிடம் இருந்து மிக அதிகமாக தேயிலை வாங்கும் நாடுகளில் ஒன்று இரான் ஆகும். இரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொழிலில் தற்போது நிலவரம் சரியில்லை என்று இவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் இந்த வாரம் நடந்த தேயிலை ஏல விற்பனையில், சிலோன் டீயில் இரானியர்கள் காட்டிவந்த ஆர்வம் கடுமையான சரிவைக் கண்டுள்ளது என்று இலங்கையில் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் தொழில் குழுமங்களில் ஒன்றான ஜான் கீல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

இரானிய சந்தையில் நல்ல விலைக்கு விற்றுவந்த தேயிலை ரகங்கள் கணிசமாக விலை குறைந்துவிட்டன என்று சுதத் முனசிங்க என்ற அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாகவே விலை குறைந்துவந்த இத்தேயிலை ரகம் இந்த வாரம் கிலோவுக்கு 3 டாலர் 47 செண்ட் என்ற அளவிலிருந்து 3 டாலர் 5 செண்டுகளாக விலை குறைந்துள்ளது.

ஏலம் எடுக்க ஆள் இல்லை என்பதால் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட தேயிலையில் 35 சதவீதம் விற்கவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

மலைச்சரிவுகளில் உயரம் குறைவான இடங்களில் விளைந்த தேயிலை சாதாரணமாக அதிக விலை போகும். இரானியர்கள் அந்த ரக தேயிலையையே கடந்த காலங்களில் அதிகம் வாங்கிவந்துள்ளனர்.

உயரம் அதிகமான மலைச்சரிவுகளில் விளையும் இலங்கைத் தேயிலை ரஷ்யாவினாலும் ஐரோப்பாவினாலும் விரும்பி வாங்கப்படுகிறது.

இந்த ரக தேயிலை ஒப்பீட்டளவில் அதிகம் விலை குறையவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் குளிர்காலத்தை முன்னிட்டு அதிகம் தேயிலையை வாங்கிவைத்துக்கொள்ளும் ரஷ்யாவின் ஏற்பாடு இன்னும் ஒரு சில வாரங்களில் நின்றுவிடும் என முனசிங்க குறிப்பிட்டார்.

ரஷ்யாவுக்கும் இரானுக்கும் அடுத்தபடியாக சிலோன் டீயை அதிகம் வாங்கும் நாடு சிரியா. அங்கே பெரும் கொந்தளிப்பு நிலவினாலும் அந்நாட்டுக்கான தேயிலை வியாபாரத்தில் பெரிதாக தொய்வு எதுவும் இல்லை என்று முனசிங்க கூறினார்.

TAGS: