இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிப்பதற்காக ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முதன் முறையாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பிகேஆர் உயர் நிலைத் தலைவர்களை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துள்ளது.
ஹிண்ட்ராப் குழுவுக்கு அதன் தலைவர் பி வேதமூர்த்தி தலைமை தாங்கினார். தமது சகோதரர் உதயகுமாருடன் ஒப்பிடுகையில் வேதமூர்த்தி பக்காத்தான் ராக்யாட் கூட்டணியுடன் கசப்புணர்வை அதிகம் கொண்டிருக்கவில்லை.
வேதமூர்த்தி நாட்டில் இல்லாத வேளையில் உதயகுமார் ஹிண்ட்ராப் அமைப்பின் பெயரளவு தலைவராக இயங்கினார்.
வேதமூர்த்தி 2007ம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் தேதி வரை வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்தார்.
உதயகுமார் வழி நடத்திய போது பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் ஹிண்ட்ராப்-உடன் உயர் நிலைப் பேச்சுக்களை நடத்துவதைத் தவிர்த்து வந்தன. உதயகுமார் மனித உரிமைக் கட்சியைத் தோற்றுவித்தார்.
இப்போது பக்காத்தான் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சி மருட்டி வந்துள்ளது.
சந்திப்புக்குப் பின்னர் மலேசியாகினியிடம் வேதமூர்த்தி பேசினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வும் முன்னாள் உதவித் தலைவர் ஆர் சிவராசா-வும் இருந்ததாக அவர் சொன்னார்.
வேதமூர்த்தி: பயனுள்ள சந்திப்பு
உடன்பாடுகள் ஏதும் ‘இன்னும்’ ஏற்படவில்லை என்றாலும் விவாதங்கள் ‘பயனுடையதாக’ இருந்தன என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.
“ஹிண்ட்ராப்-உடன் இணைந்து வேலை செய்ய பிகேஆர் விரும்புவது தெளிவாகத் தெரிந்தது,” என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.
இடம் பெயர்ந்துள்ள தோட்டத் தொழிலாளர்கள், நாடற்ற இந்தியர்கள், கல்வி ஆகியவை உட்பட பல பிரச்னைகள் ஆராயப்பட்டதாக அவர் சொன்னார்.
இன்னும் சில விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றாலும் இரு தரப்புக்களுக்கும் இடையில் இணக்கம் அதிகமாக இருந்தது.
மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிப்பதற்கு இது போன்று அழைப்பு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அனுப்பப்பட்டது என்றும் ஆனால் அதற்குப் பதில் இல்லை என்றும் வேதமூர்த்தி கூறினார்.
அதற்கு நேர்மாறாக ஹிண்ட்ராப் மீண்டும் அடுத்த வாரம் பிகேஆர் தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கணேசன் தெரிவித்தார்.
ஹிண்ட்ராப் மற்ற பக்காத்தான் உறுப்புக் கட்சிகளையும் சந்திக்கும் என்றார் அவர்.
இன அடிப்படை இல்லாத அணுகுமுறை
“இதனிடையே நாங்கள் மலேசிய இந்திய சமூகத்தின் நிலை குறித்து அனுதாபப்படுகின்றோம். ஆனால் இன வம்சாவளி, சமய வேறுபாடின்றி மக்களுக்கு உதவும் இன அடிப்படை அல்லாத அணுகுமுறையை பக்காத்தான் பின்பற்றும்,” என பத்து எம்பி-யுமான தியான் சுவா கூறியிருக்கிறார்
ஹிண்ட்ராப் தெரிவித்துள்ள பல தீர்வுகள் ஏற்கனவே பக்காத்தானுடைய Buku Jingga என்னும் ஆரஞ்சுப் புத்தக கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அவை குறித்து கடப்பாடு தெரிவிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்.
2007ம் ஆண்டு கோலாலம்பூர் சாலைகளில் 30,000 மக்கள் கூடிய மாபெரும் பேரணியின் 5வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நவம்பர் 25ம் தேதி நடத்தப்படும் நிகழ்வில் ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள தீர்வுகள் வெளியிடப்படும் என கணேசன் அதற்கு முன்னதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் விஷயங்களுக்கு பக்காத்தான் அளிக்கும் ஆதரவு ஹிண்ட்ராப் அளிக்கும் ஆதரவுடன் சம்பந்தப்பட்டது இல்லை என்றும் தியான் சுவா சொன்னார்.
“நாங்கள் அரசியல் சலுகைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக அங்கு கூடவில்லை. மலேசிய இந்திய சமூகத்தின் அவல நிலை குறித்து வேதமூர்த்தி உண்மையைப் பேசுகிறார். அவற்றை தீர்ப்பதற்கு பக்காத்தான் கடப்பாடு தெரிவிக்க வேண்டும் என வேதமூர்த்தி விரும்புவதாக நான் எண்ணுகிறேன்.”
“நாங்கள் உண்மையாக இருப்பதாக நாங்கள் அவருக்கு உறுதி அளித்தோம். ஹிண்ட்ராப் பக்காத்தானுக்கு ஆதரவைத் திரட்டுகிறதோ இல்லையோ நாங்கள் மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது எங்கள் கடமையாகும்,” என்றார் தியான் சுவா.
இதர பல விஷயங்களுடன் தான் அதிகாரத்துக்கு வந்தால் நாடற்ற மக்கள் விவகாரத்தை முழுமையாக தீர்ப்பதற்கு கால வரம்பை நிர்ணயிக்கப் போவதாக பிகேஆர் ஹிண்ட்ராப்-புக்கு உறுதி அளித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.