டிசம்பர் மாதம் அனுசரிக்கப்படவிருக்கும் மனித உரிமை தினத்துக்கு முதல் நாள் 30 அரசு சாரா அமைப்புக்களை கொண்ட ஒரு குழு அரசாங்க அமைப்புக்கள் பின்பற்றுவதாகக் கூறப்படும் முரட்டுத்தனப் பண்பாட்டை ஆட்சேபித்து பேரணி ஒன்றைத் திட்டமிட்டுள்ளன.
அத்தகையை முரட்டுத்தன பண்பாட்டைக் களைவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை என்றும் அந்தக் குழு கூறியது.
“அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள போலீஸ் முரட்டுத்தனம் சம்பந்தப்பட்ட பல கடுமையான சம்பவங்கள் இன்னும் நீதிக்கும் பதில்களுக்கும் காத்திருப்பது பற்றி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆணையர் அபு காசிம் முகமட், தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் ஆகியோருக்கு நினைவுபடுத்த நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.”
“கால ஒட்டத்தில் அந்தச் சம்பவங்கள் மீதான சர்ச்சையும் நினைவும் மறக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அல்லது அரை மனதாக எடுக்கும் நடவடிக்கைகளினால் காலஞ்சென்றவருடைய குடும்ப உறுப்பினர்கள், உயிர் பிழைத்தவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் ஆகியோர் ஏமாந்து விட மாட்டார்கள்,” என தெனாகானித்தா இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ் கூறினார்.
டிசம்பர் 8ம் தேதி மெர்தேக்கா சதுக்கத்தில் பிற்பகல் 2 மணி தொடக்கம் நடத்தப்படவிருக்கும் அந்தப் பேரணி குறித்த விவரங்களை அவர் இன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.
“அரசு வன்முறைகளை நிறுத்துங்கள்” (Stop State Violence) என்பது அந்தப் பேரணியின் தலைப்பாகும்.