சிரியா: அரச படையினரை கிளர்ச்சிக்காரர்கள் கொல்வதாகக் காட்டும் வீடியோ

சிரியாவின் வடக்கே அரச படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைத் தாக்கி அங்கிருந்தவர்களைப் பிடித்த கிளர்ச்சிக்காரர்கள், அரச படைச் சிப்பாய்கள் ஒரு டஜன் பேரை அதே இடத்தில் கேள்விக் கணக்கின்றி கொல்வதாகக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொதிப்படைந்து காணப்படும் துப்பாக்கிதாரிகள் ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டபடி, தரையில் கிடந்த கைதிகளை உதைப்பதும், பின்னர் இயந்திரத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க, சடலக் குவியல் ஒன்று காட்டப்படுவதுமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ உண்மையா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி உண்மையாக இருந்தால் போர்க்குற்றம் ஒன்றின் ஆதாரமாக இது அமையும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழு இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தலைநகர் டமாஸ்கஸையும் வடபகுதி நகரம் அலெப்போவையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி ஒன்றை கிளர்ச்சிப் படைகள் பிடித்துவிட்டார்கள் என்று தகவல்கள் வெளியான பின்னர் இந்த வீடியோ வெளிவந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.