இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஃப்ரீ மார்ச் என்ற சட்டத்தரணிகளின் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமை நீதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமை, அந்த விசாரணைகள் தொடர்பில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த குற்றச்சாட்டுக்கள் என்ன என்று கேட்கப்பட்டபோதிலும், அதுபற்றி தற்போது தெரியபடுத்த முடியாது என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் அவருக்கு எதிரான விசாரணைகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியிருப்பதாக ஃப்ரீ மார்ச் அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, பதவி நீக்குவதற்கான கண்டனத் தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ள தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு விசாரணை முடியும் வரையில் வழக்கு விசாரணைகளில் ஈடுபட சட்டத்தில் இடமிருக்கிறதா என்று ஊடகவியலாளர்கள் சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்கவிடம் வினவினர்.
அதற்கு பதிலளித்த சட்டத்தரணி பண்டார, வழக்கு விசாரணைகளில் ஈடுபடுவதற்கு தலைமை நீதிபதிக்கு இப்போதைக்கு சட்டரீதியாக பிரச்னை இல்லை என்று கூறினார்.
முன்னாள் தலைமை நீதிபதி நெவில் சமரக்கோனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அந்த விசாரணைகள் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் அவர் வழக்கு விசாரணைகளை நடத்தியதை ஃப்ரீ மார்ச் அமைப்பின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான விசாரணைகள் நடக்கும்போது, தலைமை நீதிபதியை நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு தடை உத்தரவு பிறப்பிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.