வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துமா அல்லது ஏதாவது முன்னேற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து வருகிறது.
இந்திராகாந்தி காலத்தில் திரிகோணமலையில் அமெரிக்க ராணுவத் தளம் அமைக்க விரும்பியதால்தான் போராளிகளை ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்தார். அவர் தொடர்ந்து சில காலம் இருந்திருந்தால் பங்களாதேசத்தை போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இப்போது கிட்டத்தட்ட மீண்டும் அதே நிலை. இலங்கையுடன் சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்துக்கொண்டிருக்கும் போது, இந்தியா தனது எதிர்கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அமெரிக்கா ஏறகனவே இலங்கை ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர முக்கிய பங்காற்றியுள்ளது. தொடர்ந்து, மனித உரிமைகளுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது.
பாகிஸ்தான், சீனாவுடன் ஏற்கனவே நெருக்கடி நிலை இருக்கும் போது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள இலங்கை இந்தியாவுக்கு இன்னும் ஒரு தலைவலியாக உருவாகி வருகிறது. சீனாவை கட்டுக்குள் வைத்திருக்க ஒபாமா விரும்பும் வேளையில், இலங்கையை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒபாமா மீண்டும் அதிபரானால், இலங்கை விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்குரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. கிழக்கு திமோர், தெற்கு சூடான், துஸ்னியா வரிசையில் அது அமைந்தால் ஆச்சரியமில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால் ராம்னி அதிபரானால், நிச்சயம் அமெரிக்க ஆதரவு பெற்ற சீனா – இலங்கை – பாகிஸ்தான் என மூன்று எதிரிகளை ஒன்றாக எதிர்நோக்க வேண்டிவரும் இந்தியா. இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை இவர்களே தீர்மானிக்கும் நிலை வரும்!
-Oneindia.in