சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல்

கேப்பாப்பிலவு மக்களை தமது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப் போவதாக அழைத்துச் சென்று, முல்லைத்தீவு மாவட்டம் சீனியாமோட்டையில் (வேறிடத்தில்) குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதி மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இலங்கை மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் வெள்ளிக்கிழமை 5 வீடுகளுக்கு அடையாளமாக, வைபவரீதியாக அடிக்கல் நாட்டியுள்ளார்.

கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய குடியிருப்புக் காணிகள், விவசாய காணிகள் உள்ளிட்ட இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை இராணுவம் தனது பயன்பாட்டிற்காக எடுத்துள்ளது. இந்தக் காணிகளைத் திருப்பித் தரமுடியாது என இராணுவம் தெரிவித்துள்ளதையடுத்து; அருகில் உள்ள சீனியாமோட்டை என்னுமிடத்தில் இந்தக் கிராமத்து மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் காட்டுப்பாங்கான பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ள இந்தக் குடும்பங்களுக்கே இவ்வாறு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றி கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு அரசாங்க செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், மீள்குடியேற்ற அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தலா மூன்றரை லட்சம் ரூபா செலவில் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“அவற்றில், முதற் கடட்மாக 50 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தமாக 165 வீடுகள் இந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன” என்றும் அரச அதிபர் வேதநாயகன் கூறினார்.

இந்த வீடுகள் கட்டப்படவுள்ள இடங்களில் கால் ஏக்கர் வீதம் இந்தக் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, அதற்கான காணி அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இந்த மக்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே வேறிடத்தில் – அதுவும் – வேறு ஆட்களுக்கு அரசாங்கத்தின் வேறு ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளிலேயே குடியேற்றப்பட்டிருப்பதாகவும், இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து கேப்பாப்பிலவு மக்களின் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து மீளப் பெற்று அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கேயே மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.

-BBC

TAGS: