வட மாநில முதலமைச்சர் பதவிக்கு கேபி- டக்ளஸ் தேவானந்தா போட்டி?

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை அரசுத் தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு பொறுப்பாளராக இருந்த கேபியும் தற்போது அமைச்சராக உள்ள ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தாவும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

இலங்கையின் வடக்கு  மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாநில சட்டமன்றத்றிக்கான தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆளும் கட்சியான மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி போட்டியிடக் கூடும் என்றும் டக்ளஸ் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை காட்டிக் கொடுத்துவிட்டு சிங்கள அரசிடம் ஒட்டிக்கொண்ட முன்னாள் LTTE தலைவர்களில் கேபியும் ஒருவர். இவரை அங்குள்ள தமிழ்மக்கள் தமிழின துரோகியாகவே கருதிவரும் இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படுவது குறித்து தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாநில சட்டமன்ற தேர்லில் சிங்கள அரசாங்கம் கருணா தரப்பை  வேட்பாளராக நிறுத்திபோது மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் புகட்டியதால் படுதோல்வியை சந்தித்தது. அதேபோன்று கேபியும் அரசுத் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவாராயின் அவருக்கு வடக்கு வாழ் தமிழ்மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என இலங்கை தமிழ் அரசியல் வாட்டாரங்கள் கூறுகின்றன.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது பலத்தை நிரூபிக்க வேட்பாளரை நிறுத்தும் நிலையில் மும்முனைப் போட்டி உருவாகலாம்.

TAGS: