துணைப் பிரதமர் முகைதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார்.
“பிரதமரைப் பொறுத்தவரை வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கவலை இல்லை. இது தேர்தல். போட்டியிடுவது அவர்களின் விருப்பம்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.
பார்டி கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம், பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமரை எதிர்த்துக் களமிறங்க எண்ணம் கொண்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது முகைதின் இவ்வாறு கூறினார்.
அதற்குமுன் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பெக்கான் உள்பட எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று அறிவித்து அதைக் கட்சி ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்டும் நேற்று வரவேற்றிருந்தார்.
ஆனால், ஜைட் ஒன்றைத் தெளிவுபடுத்தினார். அப்துல் ஹாடி அங்கு போட்டியிடவில்லை என்றால்தான் போட்டியிடுவேன் என்றார்.
ஆனால், இருவருமே சொன்னபடி பிரதமருக்கு எதிராகக் களமிறங்குவார்களா என்று முகைதின் கேள்வி எழுப்பினார்.
“அரசியல்வாதிகள் பலவற்றையும் சொல்வார்கள். அவை பின்னர் நடப்பதில்லை. அதனால் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்”, என்றார்.
நஜிப், 1976-இலிருந்து பெக்கான் தொகுதியை வைத்திருக்கிறார். அதற்குமுன் அவரின் தந்தை அப்போது பிரதமராக இருந்த அப்துல் ரசாக் உசேன் அதை வைத்திருந்தார்.