ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தம்மை விசாரிப்பதற்கு முடிவு செய்தால் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவையும் விசாரிக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார்.
“ஆம் ஜயிஸ் உத்துசான் மலேசியாவையும் விசாரணைக்கு அழைக்கும் என நான் நம்புகிறேன். காரணம் சமயத்தை அவதூறு செய்து செய்தி வெளியிட்டது அதுவாகும்,” என அவர் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அவரை விசாரணைக்கு அழைக்க ஜயிஸ் முடிவு செய்தால் வாக்குமூலம் கொடுக்க அவர் தயாராக இருக்கிறாரா என வினவப்பட்ட போது நுருல் அவ்வாறு பதில் அளித்தார்.
சமயத்தில் கட்டாயம் ஏதுமில்லை என அவர் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியான பின்னர் நுருல், முஸ்லிம்களிடையே சமய நம்பிக்கை சீர்குலைவதற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த மலாய் நாளேட்டில் செய்திகள் வெளியாகின.
கடந்த சனிக்கிழமையன்று கருத்தரங்கு ஒன்றில் நுருல் விடுத்த அறிக்கை தொடர்பில் கூடுதல் தகவல்கள் தனக்குக் கிடைக்குமானால் ஜயிஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என அதன் இயக்குநர் மார்சுக்கி ஹுசின் நேற்று கூறியிருந்தார்.