மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தனக்கு சவால் விடுத்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை தோற்கடித்து பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார்.
அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றுமுடிந்தது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 தேர்வாளர்களின் வாக்குகளில் அமெரிக்க அதிபராக 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறவேண்டும். அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கென்டக்கி, இண்டியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதிபர் பதவிக்கான முடிவை தீர்மானிக்கும் புளோரிடா, ஒஹயோ, வர்ஜீனியா மாநிலங்களில் காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
இதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி 203 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றார். 280 தேர்வாளர்களின் வாக்குகள் பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றார்.
மீண்டும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு ஒபாமா டுவிட்டர் இணையதளம் மூலம் தனது நன்றியினை கூறியுள்ளார். பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் இறங்கிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.