தீபாவளியையொட்டி சிலாங்கூரில் உள்ள வாக்காளர் பலருக்கு, தீபாவளி வாழ்த்து அட்டைகளும் 1மலேசியா கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வண்ணமிக்க வாழ்த்து அட்டைகளும் கடிதங்களும் சிலாங்கூரில் உள்ள இந்து வாக்காளர்களைக் குறிவைத்து அனுப்பப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கடிதத்தில் வாக்காளரின் பெயர், முகவரி, அவர் வாக்களிக்கும் இடம், அவரின் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் முதலியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த ஒரு-பக்கக் கடிதம் 1மலேசியா, பிஎன் அடையாளச் சின்னங்களையும், “Sayangi Selangor, Yakini BN” (சிலாங்கூரை நேசியுங்கள், பிஎன்னை நம்புங்கள்) என்றும் “Pusat Khidmat Rakyat BN Selangor (Pakar)” (சிலாங்கூர் பிஎன் மக்கள் சேவை மையம்) என்ற வாசகத்தையும் கொண்டிருக்கிறது. கூடவே பகாசா மலேசியாவிலும் தமிழிலும் பிரதமரின் சிறப்புச் செய்தியும் உள்ளது.
கடிதத்தில் 1மலேசியா கோட்பாட்டைக் கவனப்படுத்தும் நஜிப், மலேசியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவே அது அறிமுகப்படுத்தப்பட்டதாக வலியுறுத்தியுள்ளார்.
பிஎன் அறிமுகப்படுத்திய இக்கோட்பாட்டை எல்லா மக்களும் இன, சமய வேறுபாடின்றி இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதன் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க முடியும் என்கிறார்.
“பிஎன் நாட்டை முன்னுக்குக் கொண்டுசெல்ல உதவும் முக்கியமான கூறுகளில் ஒன்று இந்த 1மலேசியா கோட்பாடு”.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2013பட்ஜெட்டையும் தொட்டுப் பேசும் நஜிப், அது, “வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த” பல ஊக்குவிப்புகளை வழங்குவதாகக் குறிப்பிடுகிறார்.
அவை மக்களின் சுமையைக் குறைக்க உதவும் என்றவர் நம்புகிறார்.
முடிவில், தீபத் திருநாளை மலேசிய இந்துக்கள் 1மலேசிய உணர்வுடன் கொண்டாட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
பிஎன் கடிதம்வழி வாக்காளர்களைக் கவர முனைவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே செப்டம்பர் மாதம் மலேசிய தினத்தையொட்டி சிலாங்கூரில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு நஜிப் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர்கள் “எதிர்ப்புக் கலாச்சாரத்தை”க் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.