இந்திய சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் பொருட்டு தம்முடன் விவாதம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு ஹிண்ட்ராப் உட்பட இந்திய சமூக அமைப்புக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அழைத்துள்ளார்.
“இது அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்படும் திறந்த அழைப்பாகும். ஹிண்ட்ராப் மிகவும் வெளிப்படையாக பேசும் அமைப்பு என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் ஹிண்ட்ராப்பை அழைக்கிறோம். பிரதமர் புதிய அணுகுமுறையுடன் அவற்றுக்குச் செவி சாய்ப்பார்.”
“ஹிண்ட்ராப் போன்று மிகவும் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் நாங்கள் அவற்றைச் சந்திக்கிறோம். ஏனெனில் அது அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்,” என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று நிருபர்களிடம் கூறினார்.
இந்திய சமூகத்துக்கு நிலைமை ‘மிகவும் கடுமையாக’ இருப்பதால் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்க சகோதரர்களான பி வேதமூர்த்தி, பி உதயகுமார் உட்பட தலைவர்களைச் சந்திக்கவும் நஜிப் தயாராக இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் ஹிண்ட்ராப் தலைவர்கள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை சந்தித்துப் பேசிய பின்னர் நஸ்ரியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.