வேதா: இண்ட்ராப் மீதான தடையை நீக்குங்கள், பிறகு பேசலாம்

இண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்பினால் முதலில் அந்த இயக்கத்தின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி.

அரசாங்கம் இண்ட்ராபுடன் பேச்சு நடத்த விரும்புவதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய வேதமூர்த்தி, தாம் ஆகஸ்டில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதுமே நஜிப்பிடமும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடமும் அவர்களைச் சந்திக்கும் விருப்பத்தைத் தெரியப்படுத்தி இருந்ததாகக் குறிப்பிட்டார்.

“கடந்த வாரம், பிரதமராகக் காத்திருப்பவர் என்று நான் நினைக்கும் அன்வாருடன் பேச்சு நடத்தினேன். அண்மையில்தான் பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் மாட், அதன் துணைத் தலைவர் முகம்மட் சாபு ஆகியோரையும் சந்தித்தோம்.

“நஜிப் உண்மையிலேயே இண்ட்ராபைச் சந்தித்துப் பேச விரும்பினால் முதலில் அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கட்டும். பிறகு பேசலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பி.உதயகுமாரின் இளவலான வேதமூர்த்தி, இண்ட்ராப் 2007-தொடங்கி சங்கப்பதிவகத்தில் பதிவு செய்துகொள்ள விண்ணப்பம் செய்து வருகிறது என்றும் ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

நேற்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், இந்தியர் பிரச்னைகள் குறித்து இண்ட்ராபுடன் விவாதிக்க நஜிப் விரும்புவதாக அறித்திருந்தது குறித்து கருத்துரைத்தபோது வேதமூர்த்தி இவ்வாறு கூறினார்.

TAGS: