பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை மீtதான ஒரு வாசகரின் கடிதம் குறித்து புலன்விசாரணை நடத்துவதற்காக 15 போலீஸ்காரர்கள் இன்று மாலை (நவம்பர் 8) மலேசியாகினி அலுவலகத்திற்கு வந்தனர்.
குற்றவியல் சட்டம் 298 இன் கீழ் மலேசியாகினி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஓர் ஆண்டு வரையில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
விசாரணைக்குள்ளான அக்கடிதத்தை ஸ்டீவ் ஓ என்பவர் எழுதியிருந்தார். மலேசியாகினி அக்கடிதத்தை வெளியிட்டது. அக்கடிதத்தின் தலைப்பு “நாட்டிற்கான நுருலின் திருப்புமுனைக் கருத்து” என்பதாகும்.
மாலை மணி 5.15 க்கு சுபங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து எஎஸ்பி நாட்ஸ்ரி ஹருண் தலைமையில் அப்போலீஸ் குழு கோலாலம்பூர், பங்சாரிலுள்ள மலேசியாகினி தலைமையகத்திற்கு வந்தது.
அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுக்கும் நடவடிக்கை
மலேசியாகினி அலுவலகத்தில் சுமார் 90 நிமிடங்களைக் கழித்த போலீசார் பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் தேசநிந்தனைச் சட்டத்தின் வழங்கிய ஆணையுடன் வந்திருந்தனர். அப்படையினர் தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார், செய்தி ஆசிரியர் ஜெரால்ட் மார்ட்டினிஸ் மற்றும் மனிதவள அதிகாரி எ.ஷாமினி ஆகியோரிடமிருந்து அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
எதனையும் பறிமுதல் செய்யாமல் போலீசார் அங்கிருந்து மாலை மணி 6.50க்கு வெளியேரினர். ஆனால், மேற்கொண்டு விசாரணை நடத்த நாளை (நவம்பர் 9) அவர்கள் மீண்டும் வருவார்கள்.
முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான் போலீசாரின் வருகையை “இன்னொரு அச்சுருத்தும் மற்றும் தொல்லைதரும் நடவடிக்கை” என்று வர்ணித்தார்.
“ஓவின் கடிதத்தில் தேசநிந்தனையானது எதுவும் இல்லை. இது குறித்து நாங்கள் எங்களுடைய வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்துவோம்”, என்று ஸ்டீவன் கூறினார்.
2003 ஆம் ஆண்டில் இப்படி ஒரு தீடீர்ச்சோதனையை மலேசியாகினி எதிர்கொண்டது. 19 கணினிகளைப் பறிமுதல் செய்தனர். அதுவும் ஒரு வாசகர் எழுதிய கடிதம் பற்றியதுதான்.
ஆனால், எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இறுதியில் வழக்கு கைவிடப்பட்டது.