இஸ்லாம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் தாம் விடுத்த அறிக்கைகளை உத்துசான் மலேசியா திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையிடம் புகார் செய்துள்ளார்.
அந்த நாளேட்டுக்கு எதிராக ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசினிடம் பந்தாய் எம்பி வாய்மொழியாகப் புகார் செய்தார் என நுருலின் அரசியல் செயலாளர் பாஹ்மி பாட்சில் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
“அந்த நாளேடு தமது அறிக்கைகளுக்குத் தவறாக விளக்கம் கொடுத்ததைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற தரப்புக்கள் தம்மைத் தாக்குவதாக நுருல் இஸ்ஸா தமது புகாரில் தெரிவித்துள்ளார்.”
சனிக்கிழமையன்று நடந்த கருத்தரங்கில் தாம் சொன்ன விஷயங்கள் திரிக்கப்பட்டதையும் அரை மணி நேரம் நடைபெற்ற அந்தச் சந்திப்பின் போது நுருல் மார்சுக்கியிடம் விளக்கினார்.
ஜயிஸுடனான அந்தச் சந்திப்பின் போது நுருலுடன் ஷாரியா வழக்குரைஞர் பாட்லினா சிடிக்-கும் உடன் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
நுருல் உத்துசான் மலேசியா செய்தி, கருத்தரங்கில் தாம் விடுத்த அறிக்கையின் எழுத்துப் படிவம், ஒலிப்பதிவு குறுந்தட்டு ஆகியவற்றையும் ஆதாரங்களாக நுருல் ஜயிஸிடம் வழங்கினார்.