“சமயத்தில் கட்டாயம் இல்லை” என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறிக்கையில் தப்பு ஏதனையும் பாஸ் கட்சி காணவில்லை.
“இஸ்லாத்தின் காவலன்” என தன்னை அம்னோ கருதிக் கொள்வதாகவும் அது சாடியது.
“அந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்த பின்னர் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர் இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே தாம் சொன்னதின் அர்த்தம் என நுருல் இஸ்ஸா விளக்கியுள்ளார்,” என பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் இட்ரிஸ் அகமட் கூறினார்.
“அம்னோ ஏன் தொடர்ந்து பிரச்னையைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறது ? நுருல் சொல்வது பொய்களுடன் வாழ்வதை விட உண்மைக்குத் திரும்புவதே நல்லது என்ற முதுமொழிக்கு இணங்க அமைந்துள்ளது.”
இட்ரிஸ் பாஸ் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநரும் ஆவார். அம்னோ இஸ்லாத்திலிருந்து வெகு தொலைவு விலகிச் சென்று விட்டது என்று கூறிய அவர், அம்னோ தலைவர்கள் தங்களை இஸ்லாத்தின் காவலர்கள் என்பது போலக் காட்டிக் கொள்ள முயலுவதாக தெரிவித்தார்.
“அம்னோ தன்னை இஸ்லாத்தின் காவலர் எனக் காட்டிக் கொள்ள முயலும் போது நல்ல சிந்தனை கொண்ட மக்கள் கேலியாக புன்னகை செய்வர்.”
“சமயத்தின் காவலராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கும் பேசுவதற்கும் அதற்குத் தகுதி உள்ளதா,” என அவர் மேலும் வினவினார்.
சமயத்தின் மீது நுருல் கொண்டுள்ள பற்றுதல் இஸ்லாம் தொடர்பாக அம்னோ தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் தவறானது என மெய்பிக்கப்பட்டும் அவற்றை வாபஸ் வாங்க மறுக்கும் அவர்களுடைய போக்கைக் காட்டிலும் எவ்வளவோ மேலானது என இட்ரிஸ் மேலும் சொன்னார்.
அந்த மலாய்க் கட்சியின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் சமயத்திற்கு “மிகவும் ஆபத்தானவை” என அவர் கூறிக் கொண்டார்.
ஹுடுட் சட்டத்தை குறை கூறியது, தேவதைகள் கூட தவறு செய்கின்றன என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்துவது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
“முஸ்லிம்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அம்னோ சமயத்தின் காவலனைப் போஅ நடந்து கொள்கிறது,” என இட்ரிஸ் வருத்தத்துடன் கூறினார்.