போலீஸ் நுருல் மீதான விசாரணையில் ‘உதவி மட்டுமே’ செய்கின்றது

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள ‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்னும் கருத்து குறித்து ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்தும் விசாரணையில் போலீசார் ‘உதவி மட்டுமே’ செய்து வருகின்றனர்.

“அது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் அது சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்,” என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“அந்த விஷயத்தை ஜயிஸ் மேலும் ஆய்வு செய்ய விட்டு விடுவோம்,” என கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் ஜைனாப் ll மருத்துவமனையில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

நுருல், இஸ்ஸா முஸ்லிம்களிடையே ‘சமய நம்பிக்கையற்ற நிலைக்கு ஊக்கமூட்டுகிறார்’ என்னும் தலைப்பில் அவரது கருத்தை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா செய்தியாக வெளியிட்ட பின்னர் நுருல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன் உத்துசான் தமது கருத்துக்களைத் திரித்து போட்டு விட்டதாகச் சொன்னார்.