நுருலை பொது மக்கள் மதிப்பீடு செய்யட்டும் என்கிறார் பாஸ் உலாமா தலைவர்

‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவரைப் பொது மக்கள் மதிப்பீடு செய்ய விட்டு விடுவதாக பாஸ் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய அந்தக் கருத்துக்காக நுருலை ஏற்கனவே கண்டித்துள்ள அவர், நுருலை எப்படி மதிப்பீடு செய்வது என்பது மக்களுக்குத் தெரியும் என அவர் சொன்னார்.

பழமைப் போக்குடைய ஹருண் தாயிப், பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் இருக்கும் வேளையில் அவ்வாறு கூறியிருக்கிறார்.

“போதும் போதும். நான் அதிகமாக கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அந்த விஷயத்தில் நான் இனிமேல் தலையிட விரும்பவில்லை. எப்படி மதிப்பீடு செய்வது என்பது மக்களுக்குத் தெரியும் என நான் நம்புகிறேன்.”

முஸ்லிம்களிடையே குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு தமது அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை நுருலே சொந்தமாக மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என்றும் ஹருண் சொன்னார்.

“அது தவறு என அவர் கருதினால் அவர் அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் தாம் தவறு செய்யவில்லை என அவர் எண்ணினால் அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ள மறுப்பது அவருடைய சொந்த உரிமை ஆகும்,” என அவர் குறிப்பிட்டார்.

நுருல் எல்லாத் தரப்புக்களுக்கும் எது நன்மையானது என்பதை அறிந்த அறிவாற்றல் நிறைந்த தலைவர்  என்று ஹருண் மேலும் குறிப்பிட்டார்.

TAGS: