இலங்கையில் தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டுள்ள குற்றத் தீர்மானம் குறித்த நடைமுறைகள் சர்வதேச நியமங்களுக்கு எதிராக உள்ளதாக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கப்ரியல்லா நவுள் கூறியுள்ளார்.
இந்தக் குற்றத் தீர்மானம் நடைமுறைகள் நிறுவனங்களுக்கு இடையில் அதிகாரத்தை பிரிப்பதற்கான சர்வதேச நியமத்துக்கு முரணாக இருப்பதாகக் கூறும் அவர், இதனை மாற்றுமாறு இலங்கைக்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றவியல் தீர்மானம் குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிப்பதற்கு தலைமை நீதிபதிக்கு ஒரு வாரம் மாத்திரமே அவகாசம் கொடுத்திருப்பதாக கூறும் கப்ரியல்லா அவர்கள், இது தவறானது என்றும் கூறுகிறார்.
ஆகவே, தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு தான் இலங்கையை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
”தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றவியல் தீர்மானம் குறித்த முடிவை இலங்கை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாவதாக, நாட்டின் அபிவிருத்திக்கும், பாதுகாப்புக்கும், நீடித்த சமாதானம், மற்றும் மக்களின் மனித உரிமை நிலைமைகளை பாதுகாக்கவும், நீதித்துறையின் சுதந்திரம் அவசியமானது என்றும் நான் எச்சரிக்க விரும்புகிறேன். நீதித்துறையில் அவர்கள் நம்பிக்கையை இழந்தால் அதன் மூலம் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் அங்கு குறைத்து மதிப்பிடப்படும் நிலைமை உருவாகும்” என்றார் நவுள்.
நிறுவங்களுக்கிடையே அதிகாரங்கள் உரிய வகையில் பகிரப்படுவதன் அவசியம் உணரப்படுவதுடன், நாடாளுமன்றம் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றில் தனது பங்கையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயற்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தான் இலங்கைக்கு செல்ல வேண்டி ஒரு அதிகாரபூர்வ அழைப்பை இலங்கையிடம் இருந்து கோரப்போவதாகவும் ஐநாவின் சிறப்புத்தூதரான கப்ரியல்லா நவுள் கூறினார்.