இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை சேர்க்கும் சிங்கள அரசு

ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பெண்கள் 100 பேரை இலங்கை இராணுவத்தில் இணைக்கவுள்ளது. இராணுவத்தில் சேர விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் உறுதிசெய்யப்பட்டு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய தெரிவித்தார்.

இராணுவத்தில் சேரவுள்ள தமிழ் பெண்கள், இலங்கை இராணுவத்தின் பெண்களுக்கான படைப் பிரிவில் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கிளிநொச்சியிலும் நாட்டின் பிற இடங்களிலும் பயிற்சி அளிக்கப்படும் என பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய தெரிவித்தார்.

இராணுவத்தில் சேர கிளிநொச்சியில் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவர்கள் அனைவரும் சுயவிருப்பத்தின் அடிப்படியில் தான் இராணுவத்தில் சேர முன்வந்துள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.

தற்போது இராணுவத்தில் சேர வந்துள்ளவர்களில் முன்னாள் புலிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விபரங்கள் தம்மிடம் இல்லை என்று பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திலும் காவல்துறையிலும் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் சிறுபான்மையினர் இருக்கிறார்கள் என்பது பரவலாக தெரிவிக்கப்படும் ஒரு விடயம் எனினும், போரின் பின்னர் இலங்கை காவல்துறையில் குறிப்பிட்ட அளவிலான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கை காவல்துறையில் இருப்போரின் இனரீதியான விபரங்களை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.

காவல்துறையில் சுமார் 98 சதவீதத்தினர் சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இராணுவத்தில் இருப்போர் குறித்த இன ரீதியான தகவல்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை இராணுவத்தை புலம்பெயர் ஊடகங்கள் சிங்கள இராணுவம் என்றே அழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: