படுகொலையை தடுக்காத பான் கீ மூனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்!

இலங்கையில் 40,000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்துதான் இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மையும் சிங்கள அரசின் இனப்படுகொலை போரில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்ற ஐநா மன்றம் தவறிய உண்மையையும் சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐ.நா. செயலாளரிடம் வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது.

இதன் மூலம் போரிட்ட இலங்கை அரசாங்கம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பினருடன் சேர்ந்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: படுகொலைகளை தடுக்கும் பொறுப்பில் இருந்து தவறியதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை, உலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமா என உலகத் தமிழர்கள் ஆராய வேண்டும். இப்படியான படுகொலைகள் உலக வரலாற்றில் நடந்துள்ளன. இது முதன் முறை அல்ல. ஆகவே ஐ.நா நாடகம் நடிக்க முடியாது. புதிய பாடம் படிக்கிறேன் என பான் கீ மூன் பள்ளிக்குப் போக முடியாது. படுகொலைகள் தொடர்பிலும் பன்னாட்டு விசாரணை நடத்துவதும், தண்டனை வழங்குவதும் ஒரு விடயம். ஆனால் இங்கே இலங்கை மீதான நடைமுறை நிலைமைகள் கவலையளிக்கின்றன.

அரசாங்கம் படுகொலைகள் நடந்துவிட்டன என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு சொல்லி வருகிறது. அப்பாவி மக்கள் உயிர் தப்புவதற்கு கடைசி சந்தர்ப்பம் வழங்க தாம் மறுத்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. போர்க் குற்றம் என்பதை ஒருபுறம் வைத்து விட்டுப் பார்த்தாலும் போருக்கு அடிப்படைக் காரணமான தேசிய இனப்பிரச்னையை நேர்மையாகத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றமை கண்கூடாகத் தெரிகிறது.

புலிகள் தான் ஒரே தடை; போர் முடியட்டும்; தேசிய இனப்பிரச்னையை உடன் தீர்க்கிறோம் என உலகத்திற்குத் தந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறுகிறது. அத்துடன், தானே அமைத்து முன்வைக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபார்சுகளைக்கூட அமுலாக்காமல் தவிர்க்கிறது.

ஆணைக்குழு அறிக்கையில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருந்த, கடத்தப்பட்டு அல்லது சரணடைந்து காணாமல் போனவர்களின் பெயர்பட்டியலைக்கூட குறைந்த பட்சம் வெளியிடுவதற்கு மறுக்கிறது. இந்நிலையில், தவறுவிட்ட ஐ.நா இனி மேலும் தொடர்ந்து அமைதி காக்க முடியாது. 2009 மே மாதம் போர் முடிந்த பின்னர் சில நாட்களில் இலங்கை வந்த பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து ஒரு கூட் டறிக்கை வெளியிட்டார். போரின்போது மக்களுக்கு நடந்த அதே கதிதான்; இந்தக் கூட்டறிக்கைக்கும் ஏற்பட்டுள்ளதா என இன்று ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கேட்கிறோம் என மனோ கணேசன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: