எதிர்வரும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகும் வாய்பைப் பெருக்கிக்கொள்ள தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தயார்படுத்தும் டிஏபி-இன் முயற்சிமீது வெறுப்பைக் கொட்டுகிறது பிஎன்.
“மக்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தக் கட்சியிடம் ஒப்படைப்பது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்”, என்று கொம்டார் பிஎன் ஒருக்கிணைப்பாளர் லோ சை தெக் கூறினார்.
டிஏபி-இன் “உண்மை நிறத்தை” பினாங்கு மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய லோ, அக்கட்சிக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில்தான் நாட்டமே தவிர அரசாங்கத்தை வழிநடத்தத் தெரியாது என்று சாடினார்.
மாதம் தோறும் தன் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தது மூன்று செய்தியாளர் கூட்டங்களை நடத்த வேண்டும் அல்லது மூன்று பத்திரிகை அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று டிஏபி-இன் மாநிலச் செயலாளர் இங் வை ஏய்க் அண்மையில் கூறியிருப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.
முதலமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளரான இங்(இடம்) கட்சிப் பிரதிநிதிகள் விளம்பர நிகழ்வுகளை நடத்தித் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
“இது, அவர்கள் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்வதில்லை என்று வாக்காளரிடையே எதிர்மறையான எண்ணம் உருவாவதைத் தடுக்க உதவும்”, என்றாரவர்.
கொம்டார் சட்டமன்ற உறுப்பினர் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருப்பதிலிருந்து டிஏபி மற்ற எல்லாவறையும்விட விளம்பரத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது தெளிவாகிறது என்று லோ கூறினார்.
“மக்கள், செய்தியாளர் கூட்டங்களைக் கூட்டவும் அறிக்கைகள் விடவும் மட்டுமே தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால்… அதன் விளைவுகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால், அவப்பேறாக டிஏபி அந்த அடிப்படையில்தான் அதன் வேட்பாளர்களைப் பொறுக்கி எடுக்கிறது”, என்று லோ கூறினார்.
இதனிடையே டிஏபி, மாநில அரசுக்கும் சீன ஊடகங்களுக்குமிடையில் நலிவடைந்துள்ள உறவைச் சீர்படுத்தும் பொறுப்பை வொங் எங்-கிடம் ஒப்படைத்துள்ளது.
அது பற்றிக் கருத்துரைத்த லோ, டிஏபி ஊடகங்களுடன் நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டு “புனிதமான, களங்கமற்ற” தோற்றத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது என்றார்.