சிங்களப் படையினரின் கெடுபிடிக்கு மத்தியில் தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வு

இலங்கையில் தமிழர் தயாகப் பகுதிகளில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளாகிய செவ்வாய்கிழமையன்று தமிழீழ விடுதலைப் போரில் உயர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றப்பட்டு மாவீரர் நாள் அங்கு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர்கள் விளக்கேற்றி தடுப்பதற்காக சிங்களப் படையினர் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், சிங்களப் படையினரின் எதிர்ப்பை மீறியும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கழக மாணவர்கள் போரின் இறந்தவர்கள் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சென்ற சிங்களப் படையினர், மாணவர்களின் அறைகளை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதாகவும், மாணவிகளின் விடுதிக்குள் சென்ற அவர்கள், அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளையும், அறைக் கதவுகளையும் அடித்து நொறுக்கியதாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.

யாழ் நகரப் பகுதியிலும் சில இடங்களில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சில இடங்களில் ஏற்றப்பட்டிருந்த விளக்குகள் அடித்து நொருக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் சிலர் போரில் உயிரிழந்த தமது உறவினர்களின் படங்களை வீட்டில் வைத்து அவர்களை நினைவுகூர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பில் பரவலாக ஒட்டப்பட்டிருந்த மாவீரர் நாள் சுவரொட்டிகள்

இதேவேளை, மாவீரர் நாளை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளும், மாவீரர் நாளுகான சுவரொட்டிகளும் திங்கட்கிழமை காலை தொடக்கம் ஒட்டப்பட்டிருந்தன.

“நவம்பர் 27-ஆம் தேதி மாவிரர் நாள்”, “முள்ளிவாய்க்கால் படுகொலைகள்” போன்ற வாசகங்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு அண்மித்த பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்களில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை மட்டக்களப்பு நகருக்கு செல்லும் மட்டக்களப்பு-கல்முனை சாலையின் ஓரங்களில் மாவீரர் நாள் படங்களுடன் “எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம் – ஜெயந்தன் படையணி” என்ற வாசகங்களும் எழுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

எனினும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த தகவலை அறிந்த படையினரும் காவல்துறையினரும் அங்கு வந்து குறித்த சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.

TAGS: