இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முயற்சியால், ‘சுப்ரீம் சாட் 1’ என்று பெயரிடப்பட்ட இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த தொலை தொடர்பு செய்மதி செவ்வாய் கிழமை மதியம் ஷி ஜாங் விண்வெளி நிலையத்தில் இருந்து இலங்கை நேரம் 3. 43-க்கு விண்ணில் ஏவப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று சுப்ரீம் குழுமத்தின் தலைமை அதிகாரி விஜித் பெரிஸ் தெரிவித்தார்.
தொலைக்காட்சி டிடிஎச் சேவைகளை அளிக்க இச் செய்மதி முக்கியமாக பயன்படுத்தப்படும். இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கைக் கோள் தொலைக் காட்சிகளின் எண்ணிக்கையும்-அலைபேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தொலை தொடர்பு செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியாக இயக்குவது லாபம் தரும் முதலீடாக இருக்கும் என்று தி சுப்ரீம் குருப் நம்புகிறது.
320 மில்லியன் டாலர்கள் செலவில் 2015-ஆம் ஆண்டுக்குள் மூன்று செய்மதிகளை ஏவ இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரம் கண்டியிலும் விண்வெளி ஆய்வு தொடர்பாக சில கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்மதியை வைத்திருக்கும் மூன்றாவது தெற்காசிய நாடு – 45 ஆவது உலக நாடு என்ற பெருமை தற்போது இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்த செயற்கைக் கோள் தயாரிப்பில் இலங்கை சம்மந்தப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ச இந்த திட்டத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளார். தகுதியின் அடிப்படையில் தான் அவர் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுகிறார் என்கிறார் தி சுப்ரீம் குழுமத்தின் தலைமை அதிகாரி.