அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் பிரதமரின் குடும்பத்தை அந்த மங்கோலிய பெண்ணின் கொலை விவகாரத்தில் “நேரடியாகவோ, மறைமுகமாகவோ” தொடர்புப் படுத்துகின்றன என்று பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா கூறினார்.
“இதற்கு நஜிப் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல், பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இது அவரை மட்டுமல்லாமல் அம்னோவையும் பாதிக்கும்.
“நஜிப், இனியும் மெளனமாக இருக்கக் கூடாது”, என்றவர் மேலும் கூறினார்.
அவர், பாஸ் கட்சிக்குச் சொந்தமான ஹராகாடெய்லியில் செவ்வாய்க்கிழமை வெளிவந்த தீபக்-கின் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட தகவல்களைச் சுட்டிக்காட்டினார். அல்டன்துயா விவகாரத்தில் நஜிப்பைத் தொடர்புப்படுத்தி சத்திய பிரமாணம் செய்திருந்த சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தை அந்த முதலாவது சத்திய பிரமாணத்தை மறுத்து இரண்டாவது சத்திய பிரமாணம் செய்ய வைத்ததில் தாம் ஆற்றிய பங்கினை தீபக் (இடம்) அதில் விவரித்திருந்தார்.
தீபக்கின் கூற்று பிரதமரையும் அவரின் குடும்பத்தாரையும்தான் குறிப்பிடுகிறது என்பது தெளிவு என்று கூறிய ஹுஸாம், கம்பள வியாபாரியான தீபக்கை அவர்கள் நன்கு அறிவர் என்றார்.
இப்படி ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் நஜிப், அக்கட்சிக்கும் பிஎன்னுக்கும் தலைமைதாங்கி எப்படி ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார் என்றவர் கேள்வி எழுப்பினார்.
அம்னோவுக்குள்ளேயே நஜிப்புக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார்.
“யாரோ ஒருவர் கொடுத்த தைரியத்தில்தான் தீபக் இப்படிப் பேசியிருக்க வேண்டும். உள்ளுக்குள் இருந்துகொண்டு யாரோ அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.