அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றினால் குழப்பம் மூள்வது உறுதி என்றார்.
“நான் அப்படி எதுவும் சொன்னதில்லை. மே 13 பற்றி எவரும் சொல்லவில்லை. நாங்கள், அந்த (பக்காத்தான்) கட்சிகளுக்கிடையில் கொள்கை மோதல்கள் உள்ளன என்பதால் குழப்பம் உருவாகும் என்றுதான் சொல்ல வந்தோம்”, என்றார்.
பக்காத்தான் உறுப்புக்கட்சிகளுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் இருப்பதால் அது 1969-இல் நடந்ததைப் போன்ற இனக் கலவரத்துக்கு இட்டுச் செல்லுமா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
மாற்றரசுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொள்கை மோதல்கள் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது என்பதை துணைப் பிரதமர் கூறினார்.
“அதைத்தான் பிஎன்(பாரிசான் நேசனல்)-னும் பிஎன் தலைவர்களும் நினைவுபடுத்தினார்கள். மற்றபடி பயமுறுத்தவில்லை. என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்க நம் எதிர்காலத்தைப் பணயம் வைக்கக்கூடாது. நம் எதிர்காலம் பற்றியல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்”, என்றவர் கூறினார்.
நேற்று, ஷரிசாட், அம்னோ மகளிர் பகுதி ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அம்னோ பலவீனமடைந்து சவால்களை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படுமாயின் மே 13 மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்தார்.
பழமைவாதியும் வலச்சாரி போக்குள்ளவருமான முகைதின், அம்னோ புத்ரா ஜெயாவில் உள்ள பிடிமானத்தை இழந்தால் நாடு நிலைகுலையலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.
“நாட்டைப் பாருங்கள், 60 விழுக்காட்டுக்குமேல் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள்தான்.
“அவர்களுக்கு உரியதோர் இடம் இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பாருங்கள்?”, என்றவர் குறிப்பிட்டார்.
பிஎன் மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் போதுமான கவனம் செலுத்தி வந்துள்ளது. மற்ற இனங்களிடம் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றாரவர்.
ஷரிசாட்டின் பேச்சால் மலாய்க்காரர்-அல்லாத வாக்காளர்கள் ஆத்திரம் அடையலாம். அதன் விளைவாக பிஎன் பங்காளிக் கட்சிகளுக்கு சங்கடமான நிலை உருவாகலாம்.
இதன் தொடர்பில் அம்னோ பேரவையின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கெராக்கான் தலைவர் கோ சூ கூன்-இடம் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் சுருக்கமாகக் கூறினார்.
“இல்லை. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது”, என்று சொல்லிவிட்டு விரைந்து நகர்ந்தார்.
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், செய்தியாளர்கள் பக்கம் திரும்பாமலேயே போய்விட்டார்.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர், அம்னோ அச்சம்பவத்துக்குப் பின்னர் பல புதிய கொள்கைகளை அமல்படுத்தி மீண்டும் அப்படிப்பட்ட துயரச் சம்பவம் நிகழாமல் தடுத்து விட்டதாகக் கூறினார்.
“அதை ஒப்புக்கொள்கிறோமோ, இல்லையோ அது மிண்டும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் (இடம்), மே13 நிகழும் என்ற அச்சமே தேவையற்றது என்றார். ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு உதவியாக போதுமான சட்டங்கள் உள்ளன.
“அதனால், 1969 மே13 மீண்டும் நடக்கும் என்று நாங்கள் கவலைப்படவில்லை. அது முடிந்துபோன கதை”, என்றார்.