இந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை நிகழும் வேளையில் அம்னோ தலைவர்களை இலக்காகக் கொண்டு கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் வருணித்துள்ளார்.
“பொதுத் தேர்தல் நெருங்கும் போது இவை வழக்கமானவை. அரசியலுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எழுப்பப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் அம்னோ போராட்டத்தின் மீது கூட்டத்தில் நாம் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.’
“ஆகவே மற்ற பிரச்னைகள் மீது நமது கவனத்தை திசை திருப்ப நாம் எந்தத் தரப்பையும் அனுமதிக்கக் கூடாது. அந்தத் தரப்புக்களுக்கு சொந்த நோக்கம் உள்ளதால் அம்னோ உறுப்பினர்களும் மக்களும் அதனால் குழப்பமடைய மாட்டார்கள் என நான் நம்புகிறேன்,” என இன்று 66வது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் தொடக்கி வைக்கப்பட்ட பின்னர் ஹிஷாமுடின் நிருபர்களிடம் கூறினார்.
அம்னோ தலைவர்கள் மீது வணிகரான தீபக் ஜெய்கிஷானும் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஹிஷாமுடின் போலீஸ் அதிகாரங்களை எடுத்துக் கொள்வதாகவும் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதாகவும் மூசா குற்றம் சாட்டிய வேளையில் அம்னோ தலைவரான நஜிப் அப்துல் ரசாக் தம்மிடமிருந்து ‘பெரும் தொகையை’ பெற்றதாக தீபக் பழி போட்டுள்ளார்.
அந்தப் பிரச்னைகள் ஏற்கனவே ‘எழுப்பப்பட்டு பதில் அளிக்கப்பட்டு விட்டன’
மூசாவின் குற்றச்சாட்டுக்கள் பற்றி மேலும் நெருக்கப்பட்ட போது அந்தப் பிரச்னைகள் ஏற்கனவே’எழுப்பப்பட்டு பதில் அளிக்கப்பட்டு விட்டன’ என்று ஹிஷாமுடின் தெரிவித்தார். அவை ஏன் இந்த நேரத்தில் மீண்டும் எழுப்பப்படுகின்றன என்றும் அவர் வினவினார்.
“அது முதலில் எழுப்பப்பட்ட போது அந்த விஷயத்தில் நாங்கள் இணையக் கூடாது என்பதால் உள்துறை அமைச்சும் நடப்பு ஐஜிபி-யும் பதில் அளித்தார்கள்.’
“என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் திருப்பிப் பார்க்க முடியும். காரணம் ஒரே விஷயம் அதில் சம்பந்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த பதில்களையும் உள்துறை அமைச்சும் ஐஜிபி-யும் விளக்கியதையும் நீங்கள் பார்க்க வேண்டும். அது அப்படியே இருக்கட்டும்,” என்றார் ஹிஷாமுடின்.
அந்த நிருபர்கள் சந்திப்பின் போது அம்னோ உதவித் தலைவர்களான அகமட் ஸாஹிட் ஹமிடியும் ஷாபியி அப்டாலும் உடன் இருந்தார்கள்.
அந்தப் பிரச்னை பற்றிக் கருத்துரைத்த ஷாபியி, தில்லுமுல்லு செய்யப்படுவதற்கு மூசா பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
“அவர் மரக் கிளை ஒன்றை பிடித்துக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதரைப் போன்றவர் அவர். அவர் தொடர்ந்து அதனைப் பிடித்துக் கொண்டே இருக்கட்டும்.”
“மூசா இந்த நாட்டுக்கு பணியாற்றிய முதிர்ச்சி அடைந்த திறமையான மனிதர் என நான் நம்புகிறேன். ஆனால் அவரைச் சில தரப்புக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன,” என ஷாபியி சொன்னார்.