நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின் வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

135 பேர்களை கொண்ட இந்த அமைப்பின் உலகெங்கிலும் உள்ள சுமார் 60 பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் தலைவரான வி. உருத்திரகுமாரன் உட்பல மேலும் பல உறுப்பினர்கள் வீடியோ உரையாடல் மூலம் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதாக அந்த அமைப்பினர் கூறுகிறார்கள்.

இந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அந்த அமைப்பின் அவைத்தலைவரான பொன். பால்ராஜன் கூறுகையில், ஐநாவின் உள்ளக அறிக்கை தொடர்பில் அவசரமாகச் செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஒரு தீர்மானமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞானரீதியில் ஒரு பொருளாதாரத் தடையை கொண்டுவருவதற்கான ஒரு தீர்மானமும் கொண்டுவரப்பட்டதாக கூறினார்.

அந்த பொருளாதாரத்தடை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுக்குமே ஒழிய அதனால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருகாது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை இலங்கையில் தாம் நேரடியாக உதவி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை இருப்பதால், ஏனைய அமைப்புக்களின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் பால்ராஜன் கூறினார்.

புலம்பெயர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமது அமைப்பு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறிய அந்த அமைப்பின் உறுப்பினரான சண்முகநாதன் கவிராஜ், இலங்கை போரின் அழிவுகள் குறித்து தாம் ஒரு கணிப்பீட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

TAGS: