பினாங்கு தனது ‘பொன்னான’ எதிர்காலத்தை இழக்கக் கூடாது

பினாங்கு மாநில டிஏபி மாநாட்டில் அதன் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையைக் காட்டிய போதிலும் எதிரிகளுடைய வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நினைவுபடுத்தியுள்ளார்.

வரும் தேர்தலில் கூட்டரசு நிலையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் பினாங்கை மீண்டும் கைப்பற்றுவதற்கும் அம்னோ/பிஎன் -னுக்கு உள்ள ஆற்றலை உறுப்பினர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

“பொய்கள், மருட்டல்கள், பண அரசியல், இனவாத- தீவிரவாத உணர்வுகள் ஆகியவற்றின் விளைவுகளையும் குறைவாக கருத வேண்டாம்,” என பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் வலியுறுத்தினார்.

அவர் இன்று பினாங்கு மாநில மாநாட்டில் உரையாற்றினார்.

டிஏபி தலைவர்களும் உறுப்பினர்களும் தோல்வி காண்பதில் பயம் ஏதுமில்லை. ஆனால் பினாங்கு மக்கள் அம்னோவிடமும் பிஎன் -னிடமும் தங்கள் எதிர்காலத்தை இழக்கக் கூடாது என்றார் லிம்.

“நாம் தோல்வி கண்டால் மக்களும் தோல்வி காண்பர்,” என அவர் சொன்ன போது கட்சிப் பேராளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அடுத்த தேர்தல் டிஏபி-யின் தலைவிதியை மட்டும் நிர்ணயிக்கப் போவதில்லை மக்களுடைய எதிர்காலத்தையும் உறுதி செய்யப் போகிறது என்றும் அவர் சொன்னார்.

பினாங்கு மாநிலத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் மக்களுக்கு பக்காத்தான் ராக்யாட் வகுத்துள்ள அனைத்து ‘பொன்னான திட்டங்களும் பள்ளிக்கூடங்களுக்கான ஆண்டு ஒதுக்கீடுகளும் போவதை அம்னோ உறுதி செய்யும் என்றும் லிம் எச்சரித்தார்.

“நமது ஜனநாயகச் சீர்திருத்தங்களும் நேர்மை நடவடிக்கைகளும் ஊழல் மலிந்த கடுமையான ஒடுக்குமுறையைப் பின்பற்றும் ஆட்சியால் மாற்றப்படுவதை அம்னோ உறுதி செய்யும்.”

“மக்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்துக்குப் பதில் சேவகர்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கம் அமைவதற்கும் அம்னோ வழி வகுத்து விடும்,” என்றும் லிம் குறிப்பிட்டார்.

‘சிறைச்சாலைகளில் இருந்ததால் போதுமான அனுபவம் இல்லை’

அந்த பினாங்கு மாநில டிஏபி மாநாட்டில் 280க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிகழ வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி மாநில டிஏபி மாநாடு இதுவாகும்.

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ், மாநில பிகேஆர் தலைவரும் முதலாவது துணை முதலமைச்சருமான மான்சோர் ஒஸ்மான், மாநில பாஸ் குழு உறுப்பினர் ஜமாலுதின் சாஆட் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மிகவும் உற்சாகமாகப் பேசிய லிம் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசாங்கக் கொள்கைகளையும் சாதனைகளையும் விளக்கினார்.

அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ‘கண்ணீர் விட்ட’ அம்னோ உறுப்பினர்களைக் குறை கூறிய அவர்,  “அவர்கள் லைனாஸுக்காக அழ வேண்டும்” என்றார்.

லிம் உரையாற்றிய பின்னர் தலைவர்களும் பேராளர்களும் எழுந்து நின்று Ubah சின்னங்களையும் கொடிகளையும் அசைத்தனர். அதே வேளையில் “Jom Ubah!” என்றும் முழங்கினர்.

இதனிடையே  பக்காத்தான் பறைசாற்றுவதற்கு நிறைய சாதனைகள் இருப்பதாக கூறிய லிம் 18 ஆண்டுகளில் பிஎன் செய்ததைக் காட்டிலும் கூடுதலாக ஐந்து ஆண்டுகளில் பக்காத்தான் செய்துள்ளதை யாரும் மறுக்க முடியாது என்றார்.

பக்காத்தானுக்கு போதுமான அனுபவம் இல்லை என்றாலும் அதன் தலைவர்கள் “எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எங்கும்” பிஎன் -னைக் காட்டிலும் நன்றாக செயல்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதற்கு அதன் தலைவர்கள் பெரும்பாலான தங்கள் நேரத்தை சிறைச் சாலைகளில் கழித்தது தான் காரணம்,” என அவர் வேடிக்கையாகக் கூறினார்.

கடந்த ஆண்டுகளில் கட்சி எதிர்நோக்கிய சவால்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆற்றியுள்ள துணிச்சலும் உறுதியும் நிறைந்த பங்கிற்காக லிம் மூத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“நாம் இங்கு இருப்பதற்கு அவர்களே காரணம். நாம் அவர்களுக்கு உண்மையில் நன்றி சொல்ல வேண்டும்,” என லிம் சொன்ன போது எழுந்த கரவொலி வெகு நேரம் நீடித்தது.

“நல்ல எதிர்க்கட்சி அதே வேளையில் சிறந்த அரசாங்கம்”

டிஏபி நல்ல எதிர்க்கட்சியாகத் திகழ்ந்துள்ளது என்றும் ஆனால் ‘அரசாங்கம் என்ற முறையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்’ என்றும் பினாங்கு முதலமச்சர் குறிப்பிட்டார்.

“நாம் நல்ல அரசாங்கமாக இருக்க முடியுமா என்பது இப்போது நமது கவலை அல்ல. பினாங்கை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே நமது கவலை,” என்றார் அவர்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்தவை திறமையான எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து இன்னும் திறமையான அரசாங்கமாக நம்மை உருமாற்றம் செய்துள்ளன,” என பாகான் எம்பி-யுமான லிம் சொன்னார்.

“தூய்மையான, கௌரவமான, மக்களுக்கும் கொள்கைகளுக்கும் விசுவாசமான பண்புகளை டிஏபி கொண்டுள்ளதும் நமது தலைவர்களுடைய உடைக்க முடியாத குழு உணர்வும் நமது வெற்றிகளுக்கு அடிப்படை என நான் துணிந்து சொல்வேன்.”

“திறமை, பொறுப்பு, வெளிப்படை” என்ற நமது கோட்பாட்டை அது பிரதிபலிக்கின்றது.

TAGS: